சர்ச்சைக்குரிய இடங்களுடன் வரைபடம்; நேபாள பார்லி., மறுப்பு

தினமலர்  தினமலர்
சர்ச்சைக்குரிய இடங்களுடன் வரைபடம்; நேபாள பார்லி., மறுப்பு

காத்மாண்டு: இந்தியா மற்றும் நேபாளம் இடையே, சர்ச்சைக்குரிய லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்களுடைய எல்லைக்குட்பட்டதாக காட்டும் புதிய, தேசிய வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், பார்லி., இந்த வரைபடம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தியா மற்றும் நேபாளம் இடையே அமைந்துள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்துக்குட்பட்டதாக காட்டும், புதிய அரசியல் தேசிய வரைபடத்தை, இந்திய அரசு கடந்தாண்டு, அக்டோபரில் வெளியிட்டது.

இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, லிபுலெக் பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம், 90 கி.மீ., துாரம் சுற்றி செல்வது தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் இந்த சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.


அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் துவங்கியது. இந்த, 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தநிலையில், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்த நேபாள அரசு, வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களை பார்லி.,யில் தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் வழங்க பார்லி., தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, புதிய வரைபடம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் பாடப் புத்தகங்களிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் அச்சிடப்பட்டு, அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை