26 ஆண்டுகளில் மிக மோசமான பயிர் தாக்குதல் : ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசத்தில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!!!

தினகரன்  தினகரன்
26 ஆண்டுகளில் மிக மோசமான பயிர் தாக்குதல் : ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசத்தில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!!!

டெல்லி : கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். உலகின் மிக அழிவுகரமான புலம்பெயரும் பூச்சி இனம், பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 8 கோடி வெட்டுக்கிளி கூட்டம் சூழ்ந்து பயிர்களை படுநாசமாக்கி விடும். உலக நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு வேட்டு வைக்கும் இந்த பயங்கரமான வெட்டுக்கிளிகள், பலதரப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இருக்கும் இந்த காலகட்டத்திலும் கூட உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கின்றன.ஒவ்வொரு நாடாக கண்டம் விட்டு கண்டம் புலம் பெயரும் இந்த வெட்டுக்கிளிகள் தனது இலக்கை தற்போது இந்தியா பக்கம் திருப்பியுள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களை வியாபித்து இருக்கும் வெட்டுக்கிளிகள் ஏக்கர் கணக்கில் கபளீகரம் செய்து வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களை வெட்டுக் கிளிகள் சேதப்படுத்திவிட்டன. அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவி உள்ள வெட்டுக் கிளிகளை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை. வெட்டுக்கிளிகளின் திடீர் படையெடுப்பால் உத்தரப் பிரதேசத்தின் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 75% அளவிற்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து விட்டன. இதையடுத்து பயிர்கொல்லி வெட்டுக்கிளிகளின் இடம்பெயர்வை தடுத்தி நிறுத்தி அவற்றை அழிக்கும் பணிகளை மத்திய வேளாண்துறை முடுக்கி விட்டுள்ளது.இந்தியாவில் 26 ஆண்டுகளில் மிகப் பெரிய பயிர் தாக்குதல் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை