டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து : 2000 குடிசைகள் எரிந்து சாம்பலாகின

தினகரன்  தினகரன்
டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து : 2000 குடிசைகள் எரிந்து சாம்பலாகின

டெல்லி : டெல்லி துக்ளகாபாத்தில் நள்ளிரவில் குடிசைகளில் பற்றிய தீயால் பெரும் பதற்றம் உருவானது. துக்ளகாபாத் என்பது டெல்லியின் தெற்கு பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நள்ளிரவில் தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் உருவானது. காற்றில் மளமளவென தீ பரவியது. இதனை அறிந்த மக்கள் குடிசைகளில் இருந்து அலறி அடித்து வெளியேறினர். இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 வண்டிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறக்கி விடப்பட்டனர். கோடைகாலம் என்பதால் தீ மளமளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கு எளிதில் பரவியது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி, 4 மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2000 குடிசைகள் வரை சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிர் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.  இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.2000 குடிசைகள் தீயில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை