நீரிழிவு,ரத்த அழுத்தம் உள்ளோர் கவனம்: அறிகுறி இல்லாமல் வருகிறது ஆபத்து

தினமலர்  தினமலர்
நீரிழிவு,ரத்த அழுத்தம் உள்ளோர் கவனம்: அறிகுறி இல்லாமல் வருகிறது ஆபத்து

சென்னை: ''தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 88 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்படுவோரில், வயதானோர், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட, நாள்பட்ட நோய் பாதிப்புள்ள, 84 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.

''இதைத் தவிர்க்க அவர்கள், உரிய நேரத்தில், மாத்திரைகள் சாப்பிட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு, கவனமாக இருக்க வேண்டும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 805 பேருக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து வந்த, 87 பேர்; குஜராத்தில் இருந்து வந்த மூன்று பேர்; கேரளாவில் இருந்து வந்த, இரண்டு பேர்; ஆந்திராவில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, 4.21 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதில், 17 ஆயிரத்து, 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.நேற்று, 407 பேர் வீடு திரும்பினர்; இவர்களையும் சேர்த்து, இதுவரை, 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடுத்தடுத்து பலி*
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, சென்னையை சேர்ந்த, 33 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
*
தனியார் மருத்துவமனையில் இருந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட, 72 வயது முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்
*
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 55 வயது நபர்; 68 வயது முதியவரும், நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
*
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 75 வயது முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்
*
சென்னை தனியார் மருத்துவமவமனைகளில் சிகிச்சையில் இருந்த, செங்கல்பட்டை சேர்ந்த, 86 வயது முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்
* தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சென்னையை சேர்ந்த, 69 வயது மூதாட்டியும், 23ம் தேதி உயிரிழந்தனர்.
இவர்களில் பலருக்கு, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட, நாட்பட்ட நோய்கள் இருந்தன. இதுவரை, 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமான சேவையால்...கொரோனா தடுப்பில், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரை முழுமையாக குணப்படுத்தி வருகிறோம்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த, 942 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மகராஷ்டிராவில் இருந்து வந்த, 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மேலும் ஒரு சவாலாக, உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும், விமான பயணியர் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.பரிசோதனையில் அறிகுறி இல்லாதவர்களின் கையில், அழியாத மை வைக்கப்படும். அவர்கள், வீடுகளிலேயே, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களை, சுகாதாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பர்.

ஆராய்ச்சி முடிவுகொரோனா குறித்த ஆராய்ச்சியில், மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், 88 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறி இல்லாமல், கொரோனா தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது; 12 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறியுடன் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதில், காய்ச்சலுடன், 40 சதவீதம் பேர்; இருமலுடன், 37.8 சதவீதம் பேர்; தொண்டை வலியுடன், 10 சதவீதம் பேர்; மூச்சு திணறலுடன், 9 சதவீதம் பேர்; மூக்கு ஒழுகுதலுடன், 4 சதவீதம் பேர் என்ற அளவில் அறிகுறி உள்ளது.அதேபோல், உயிரிழப்பு குறித்தும், மாவட்ட வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை, 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 84 சதவீதம் பேர், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளாக உள்ளனர். அதில், 50 சதவீதம் முதியவர்கள். சர்க்கரை நோயாளிகள், ரத்தம் அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்கள், அதிகம் உயிரிழந்து வருகின்றனர். எனவே, முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கவனமாக இருப்பதுடன், முறையான அளவில் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில், இறப்பு விகிதம் குறைந்து, குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தை, மத்திய அரசு பாராட்டி உள்ளது. மேலும், நமது சிகிச்சை முறையை மற்ற மாநிலங்களுக்கு பகிரவும் அறிவுறுத்திள்ளனர். அதன்படி, தமிழக மருத்துவ குழுவினர், மற்ற மாநிலங்களுக்கு சிகிச்சை நடைமுறையை பகிர்ந்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை