வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு

புதுடில்லி: கொரோனா ஊரடங்கினால், நாடு முழுதும் மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, ஜூலை, 31 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் பரவலால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கின் காரணமாக, நாடு முழுதும், ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் முடிந்த நிலையில், அவற்றின் காலக்கெடு ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை புதுப்பிக்க, பிப்., 1 முதல் கட்டணம் செலுத்தியுள்ளவர்கள், அவற்றுக்கான ஆவணங்களை, அதே கட்டணத்தில், அபராதம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம். ஜூலை, 31 வரை, ஆவணங்களைப் புதுப்பிக்க வருபவர்களிடம், தாமத காலத்துக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி, பிப்., 1ம் தேதிக்குப் பின், வாகனங்களின் ஆவணங்கள் எந்த தேதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், தற்போது அவற்றை இயக்குவதுடன், ஜூலை, 31க்குள், புதுப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது, மத்திய அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசும், இன்று அல்லது நாளைக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளது. இதையடுத்து, அவகாச நீட்டிப்பு உறுதியாக்கப்படும். இதனால், ஜூலை வரை, ஆவணங்களை புதுப்பிக்க அபராதம் ஏதும் விதிக்கப்படாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை