உள்நாட்டு விமான சேவை துவக்கம்: பயணியர் குழப்பம்

தினமலர்  தினமலர்
உள்நாட்டு விமான சேவை துவக்கம்: பயணியர் குழப்பம்

சென்னை : தமிழகத்தில் இருந்து, 61 நாட்களுக்குப் பின், உள்நாட்டு விமான சேவை நேற்று துவங்கியது. டில்லி, பெங்களூரு, கொச்சி, மதுரை, கோவை, ஐதராபாத், கவுகாத்தி நகரங்களுக்கு, 19 விமானங்கள் இயக்கப்பட்டன. பிற நகரங்களில் இருந்து, சென்னைக்கு, 19 விமானங்கள் வந்தன. சில விமானங்கள் ரத்தானதால், பயணியர் குழப்பம் அடைந்தனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு, மார்ச், 25 முதல், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்கள் தவிர்த்து, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணியர் விமான சேவைகளை ரத்து செய்தது.

இந்நிலையில், நேற்று முதல், சில கட்டுப்பாடுகளுடன், உள்நாட்டு விமானங்களை இயக்க, மத்திய அரசு அனுமதித்தது.

விமானங்கள் இயக்கம்


இதையடுத்து, சென்னையில் இருந்து, 61 நாட்களுக்குப் பின், டில்லி, பெங்களூரு, கொச்சி, மதுரை, கோவை, ஐதராபாத், கவுகாத்தி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு, நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து, டில்லிக்கு நேற்று காலை, 6:35 மணிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' முதலாவது விமானமாக, 116 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
டில்லியில் இருந்து, நேற்று காலை, 8:10 மணிக்கு, 'ஏர் ஏஷியா' விமானம், 29 பேருடன், சென்னை வந்தது. டில்லியில் இருந்து இரண்டாவது விமானம், நேற்று காலை, 9:15க்கு, 109 பேருடன், சென்னைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து, நேற்று காலை, 10:30க்கு, சென்னை வந்த விமானத்தில், 36 பேர் மட்டுமே வந்தனர்.

சென்னையில் இருந்து, மஹாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும், அந்த மாநிலங்களில் இருந்து, சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்படவில்லை.
சென்னையில் இருந்து, பிற நகரங்களுக்கு நேற்று, 19 விமானங்கள் இயக்கப்பட்டன. பிற நகரங்களில் இருந்து, சென்னைக்கு, 19 விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சிக்கு போதிய பயணியர் இல்லாததால், விமானங்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே பதிவு செய்திருந்த பயணியர், இதனால் குழப்பம் அடைந்தனர்.

மருத்துவ பரிசோதனைவெளிமாநிலங்களில் இருந்து, சென்னை வந்த பயணியருக்கு, 'தெர்மல் ஸ்கேனர்' கருவியால், அவர்களது உடல் வெப்பத்தை கண்டறியும் சோதனை நடந்தது.
பயணியின், முகவரி, தொலைபேசி எண்கள் குறித்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சோதனை நடந்ததற்கு அடையாளமாக, கையில் அழியா மையால் முத்திரை பதிக்கப்பட்டது.

'இ - பாஸ்' இருக்கா?பயணியர் வெளியே வரும் போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம், தங்களது மொபைல் போனில், தமிழக அரசிடம் பெற்ற, 'இ - பாஸ்' காண்பித்தனர். அதன் பிறகே வெளியேற அனுமதிக்கப்பட்டனர். 'இ - பாஸ்' இல்லாமல் வந்தர்கள், பாஸ் பெற வசதியாக, விமான முனையத்தில், இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
'கொரோனா வைரஸ்' அறிகுறியுடன் வரும் பயணியரை அழைத்து செல்ல, ஆம்புலன்ஸ் மற்றும் தமிழக அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்த விரும்புகிறவர்களை அழைத்து செல்ல, பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சேலத்திற்கு சேவைசென்னை - சேலம்; சேலம் - சென்னை மார்க்கத்தில், நாளை முதல், 'ட்ரூ ஜெட்' நிறுவனம், விமான சேவைகளை துவக்குகிறது. சென்னையில் இருந்து காலை, 7:35 மணிக்கு சேலத்திற்கும், அங்கிருந்து, காலை, 8:50 மணிக்கு, சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

மூலக்கதை