விசாகப்பட்டினம் விபத்து வழக்கு: இயக்குனர்களுக்கு அதிரடி தடை

தினமலர்  தினமலர்
விசாகப்பட்டினம் விபத்து வழக்கு: இயக்குனர்களுக்கு அதிரடி தடை

அமராவாதி: ஆந்திராவின் விசாகபட்டினத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், வாயு கசிந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில், அந்த தொழிற்சாலையின் இயக்குனர்கள் நாட்டை விட்டு வெளியேற, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வந்த, எல்.ஜி., பாலிமர் என்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், இம்மாதம், 7ம் தேதி அதிகாலை, திடீரென விஷ வாயு கசிந்தது. இதனால், அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட, 12 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கக்கோரியும், அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:விபத்துக்கு காரணமான தொழிற்சாலை வளாகம் முழுவதையும் முடக்கி வைக்க வேண்டும்.


அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, நீதிமன்ற அனுமதியின்றி, யாரும் வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. விசாரணை அதிகாரிகள் தவிர, வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஆலையின் இயக்குனர்கள் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கி வைக்கப்பட வேண்டும். இந்த விபத்து குறித்து, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, வரும், 28க்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை