காஷ்மீரில் கைவைத்தால் அவ்வளவு தான்: பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் கைவைத்தால் அவ்வளவு தான்: பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு

இஸ்லாமாபாத்: ''காஷ்மீர், சர்ச்சைக்குரிய பகுதி. அதில், இந்திய அரசு, ஏதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பாக்., ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும்,'' என, பாக்., ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, மத்திய அரசை சீண்டியுள்ளார்.


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். பின், ராணுவ வீரர்களிடையே அவர் பேசியதாவது:காஷ்மீர், சர்ச்சைக்குஉரிய பகுதி. அதில், இந்திய அரசு, ராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால், பாக்., ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும். தெற்காசிய அளவில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எந்தவித அச்சுறுத்தலையும் சந்தித்து, அதை முறியடிக்க பாக்., ராணுவம் தயாராக உள்ளது. இந்திய எல்லை பகுதியில் இருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கவும், பதிலடி தரவும் பாக்., வீரர்கள் முழு அளவில் தயாராக உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.


பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:பாகிஸ்தான், எப்போதும் அமைதியான சூழலையே விரும்புகிறது. அதற்காக, இது, பாகிஸ்தானின் பலவீனம் என, யாரும் நினைத்து விடக் கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய ராணுவம், எதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நாங்கள் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.

கடுமையான பதிலடி கொடுப்போம். காஷ்மீரில், மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இது குறித்து, ஐ.நா., மற்றும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிடம் வலியுறுத்த திட்டமிட்டுஉள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா, பொய் பிரசாரம் செய்து வருவதையும், இந்த அமைப்பிடம் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை