குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தியாக வேண்டும்; 60 கி.மீ நடந்தே சென்று கரம்பிடித்த மணமகள்: ஊரடங்கு நேரத்தில் உத்தரபிரதேசத்தில் சுவாரஸ்யம்

தினகரன்  தினகரன்
குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தியாக வேண்டும்; 60 கி.மீ நடந்தே சென்று கரம்பிடித்த மணமகள்: ஊரடங்கு நேரத்தில் உத்தரபிரதேசத்தில் சுவாரஸ்யம்

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் அடுத்த வைசாபூர் கிராமத்தை சேர்ந்த வீரேந்திரா என்பவருக்கும், எல்லை மாவட்டமான கான்பூர் அடுத்த லக்ஷ்மன் திலக் கிராமத்தில் வசிக்கும் கோரேலலின் மகள் கோல்டி என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடந்தன. முன்னதாக ஊரடங்கு அமலில் இருந்ததால், இரு குடும்பங்களுக்கிடையில் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு திருமணம் ேததி உறுதிசெய்யப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. மணமகனும், மணமகளும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தனர். ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் செய்ய முடியவில்லை. அதிர்ச்சியடைந்த மணமகள், குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து மணமகனின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சல்வார் சூட் அணிந்து கால்நடையாக மணமகனின் வீட்டிற்கு புறப்பட்டார். சுமார் 60 கி.மீ தூரம் நடந்து, மணமகன் வீடான வைசாபூர் அடைந்தார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த மணமகளை பார்த்து, மணமகனும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியமடைந்தனர். மணமகனின் உறவினர்கள் அவரை மீண்டும் வீட்டிற்கு திருப்பிச் ெசல்ல அறிவுறுத்தினர். ஆனால், மணமகள் திடீரென அழ ஆரம்பித்தாள். இதற்கிடையே மணமகளின் பெற்றோர் தங்களது மகள் வீட்டில் இருந்து மாயமானது குறித்து, மணமகனின் வீட்டிற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது, மணமகனின் வீட்டார், தங்கள் வீட்டில் மணமகள் இருப்பது குறித்து தெரிவித்தனர். அதனால், மணமகள் வீட்டார் நிம்மதியடைந்தனர். மணமகனின் குடும்பத்தார், ஒரு புதிய திருமண தேதியை நிர்ணயம் செய்து, அதன்பின் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணிடம் கேட்டனர். ஆனால் அந்த பெண், உடனடியாக திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார். எவ்வளவோ எடுத்து சொல்லியும் மணமகள் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மணமகன் பெற்றோர், அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசி அனுமதி பெற்று திருமண ஏற்பாடுகளை வேகமாக செய்தனர். உடனடியாக ஒரு திருமண உடை மற்றும் ஆபரணங்கள் கடையில் இருந்து வரழைக்கப்பட்டன. பின்னர், நேற்று காலை ஷாகர்வாரா பாகுலிஹாயில் உள்ள கோயில் வளாகத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, ​​மணமக்கள் முகக் கவசம் அணிந்து மாலை மாட்டிக் கொண்டனர். இந்த சுவாரஸ்யமான சம்பவம், உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை