டி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு

தினகரன்  தினகரன்
டி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில்  நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படும் நிலையில், அதற்கு பதில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன்கள் இயான் சாப்பல், மார்க் டெய்லர் தெரிவித்துள்ளனர்.  கொரோனா பிரச்னையால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி தொடர்கிறது. உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் டி20 நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இயான் சாப்பல் கூறுகையில், ‘உலக கோப்பை டி20 போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. கொரோனா பீதி தொடரும் நிலையில் உலக கோப்பை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான காலத்தை பிசிசிஐ வென்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது’ என்றார். இதே கருத்தை வலியுறுத்திய மற்றொரு முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியதாவது: கொரோனா தொற்று உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து அணிகள் ஆஸ்திரேலியா வருவதும்,  இங்கே நிர்ணயிக்கப்பட்ட 7 நகரங்களில் உலக கோப்பை போட்டிகளை நடத்துவதும் சிரமமான விஷயம். இதனால் உலகக் கோப்பை போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தள்ளி வைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நடத்த விரும்பினால் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு  கிடைக்கும். அதை தவிர வேறு வாய்ப்புகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உலக கோப்பை போட்டிக்காக ஒட்டுமொத்தமாக அணிகள் ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டுக்கு செல்வதைவிட ஐபிஎல் போட்டிக்காக தனிப்பட்ட முறையில் வீரர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வது தனிப்பட்ட பொறுப்பாக இருக்கும். அதிக பிரச்சினை இருக்காது. இவ்வாறு டெய்லர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை