2 மாதத்தில் சர்வதேச விமான சேவை: அமைச்சர் தகவல்

தினகரன்  தினகரன்
2 மாதத்தில் சர்வதேச விமான சேவை: அமைச்சர் தகவல்

புதுடெல்லி:  விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை எந்த தேதியில் மீண்டும் தொடங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. அப்போதைய சூழலின் அடிப்படையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்கு முன்பே கூட தொடங்கப்பட வாய்ப்புள்ளது. ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைகள் நாளை முதல் தொடங்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. கடந்த 25 நாட்களில் வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் மூலம் 50,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர். ஆரோக்ய சேது செயலியில் பச்சை நிறம் காட்டும் பயணிகள் தனிமைப்படுத்துதல் பற்றி கவலைப்பட தேவையில்லை. நாடு திரும்பியதும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால் பயணிகள் தாங்கள் கொரோனா பாதித்த பகுதியில் இருந்து வரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது, உள்நாட்டு சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்காணித்து அதன் அடிப்படையில் சர்வதேச விமான சேவைகள் குறித்து முடிவெடுக்கப்படும். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டாம் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளனர். கர்நாடகா உள்பட சில மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அங்கு வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று கூறியுள்ளன.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை