தனிமை முகாமில் வாடிய நண்பனுக்கு அல்வாவில் கஞ்சா: ‘பாசக்கார’ தோழன் கைது

தினகரன்  தினகரன்
தனிமை முகாமில் வாடிய நண்பனுக்கு அல்வாவில் கஞ்சா: ‘பாசக்கார’ தோழன் கைது

திருவனந்தபுரம்: அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்று பொருளே ஆகிவிட்டது. ஆனால், கேரளாவில் நண்பனுக்காக கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து  வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார் ஒரு வாலிபர்.  கேரள மாநிலம்  பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவரது  உயிர் நண்பரான ஒருவர் ஐதராபாத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இவரது படிப்பு முடிந்தது. ஆனால்  லாக் டவுன் காரணமாக இவரால் ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரளாவுக்கு திரும்பினார். வெளிமாநிலங்களில் இருந்து கேரளா திரும்புபவர்கள் 14 நாள் தனிமை முகாமில்  இருக்க வேண்டும்.  இதையடுத்து அந்த வாலிபர் அடூர் அரசுப்பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் இருந்தார். இவருக்கு கஞ்சா பழக்கம் உண்டு.  ஆனால் அரசு முகாமில் கஞ்சாவுக்கு எங்கே போவது?  இதையடுத்து தன்னுடைய  நண்பன் வினோத்தை தொடர்பு கொண்ட அவர், தனக்கு உடனடியாக கஞ்சா வேண்டும் என்று  கேட்டுள்ளார். ஆனால் அரசு முகாம் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும்  உண்டு. எப்படி நண்பனின் விருப்பத்தை நிறை வேற்றலாம் என யோசித்த வினோத்துக்கு ஒரு ஐடியா வந்தது. இதையடுத்து  ஒரு பாக்கெட் அல்வாவை வாங்கி  அதற்குள் கஞ்சாவை  மறைத்து வைத்தார். பின்னர் முகாமுக்குச் சென்ற வினோத்,   அங்கிருந்த ஊழியர்களிடம் பார்சலை கொடுத்து அதில் அல்வா இருப்பதாகவும், அதை  தனது நண்பனிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளார்.  அவர்களும் அதை வாங்கி  வைத்துக் கொண்டனர். பின்னர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அல்வா  பாக்கெட்டுக்குள் ஒரு சிறிய பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.  அதைத் திறந்து பார்த்தபோது அந்த பொருள் கஞ்சாவாக  இருக்கலாமோ  என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த  பாதுகாப்பு ஊழியர்கள் அடூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  விரைந்து சென்று பரிசோதனை நடத்தியதில் அந்த பாக்கெட்டில் இருந்தது கஞ்சா என  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

மூலக்கதை