புது ரூட்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
புது ரூட்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சென்னை : ''சென்னையில், மூன்று திட்டங்கள் வாயிலாக, கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

சென்னையில் உள்ள குடிசை பகுதி மக்களுக்கு, விழிப்புணர்வு மற்றும் சேவைக்காக, 2,500 தொண்டு நிறுவன களப்பணியாளர்கள், களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.இலவசமாக கையுறைஅவர்கள் பணியை, வருவாய் நிர்வாக ஆணையரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர், அணுகு சாலை, நொச்சி நகரில், நேற்று துவக்கி வைத்தனர். அப்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும், 2,500 பேருக்கு, இலவசமாக கையுறை, முகக் கவசம், கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டன.

இதுகுறித்து, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில், தற்போது, 1,461 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் இருந்த, 3,991 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறையின், 500 சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சியில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

36 வார்டுகளில் பாதிப்பு


தற்போது, ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார், அம்பத்துார், திருவொற்றியூர், மணலி போன்ற மண்டலங்களில், பாதிப்பு குறைந்து வருகிறது.ராயபுரம், கிருஷ்ணாபேட்டை, பெரியமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பாதிப்பு உள்ளது. கோயம்பேடு தொற்று முழுமையாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, 36 வார்டுகளில் தான், பாதிப்பு உள்ளது. பாதிப்புள்ள பகுதிகளில், குறிப்பாக, 50 சதுர அடியில் வசிக்கும் மக்கள், 12 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் முகக் கவசம் தொடர்ந்து அணிந்தால், நோயில் இருந்து விடுபட முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:கொரோனாவை, புதிய திட்டங்கள் வாயிலாக அணுக உள்ளோம். அதன்படி, சென்னையில், 1,979 குடிசை பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில், தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், அப்பகுதியின் சூழலை அறிந்து, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிப்படுத்துவர்.

மேலும், வயதானவர்கள், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்றவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும். மேலும், மாநகராட்சியின், 140 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து பெறும் நோயாளிகள் குறித்த விபரங்கள் உள்ளன. அதன்படி, 1.75 லட்சம் நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, ஒன்றரை மாதத்திற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, உடல்நிலை சீராக உள்ளதை உறுதிப்படுத்தப்படும்.

சென்னையில், எட்டு லட்சம் முதியவர்கள் உள்ளனர். அவர்களில், இரண்டு லட்சம் பேருக்கு உடல் உபாதைகள் உள்ளன. அவர்களுக்காக, 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், நான்கு நாட்களுக்கு ஒருமுறை, முதியவர்களை தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து கேட்டறிவர். இதுபோன்ற புதிய திட்டங்கள், பலன் அளிக்கக் கூடிய முயற்சியாக அமைவதுடன், கொரோனாவை அதிகரிப்பதும் குறைக்கப்படும். சென்னையில் கொரோனா பாதித்த, அனைவரின் தொடர்பையும், 24 மணி நேரத்தில் கண்டறிந்து வருகிறோம். அடையாளம் காணுவது பெரிய சவாலாக இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை