பாகிஸ்தானின் கராச்சியில் விமானம் விழுந்து நொறுங்கியது : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு; 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானின் கராச்சியில் விமானம் விழுந்து நொறுங்கியது : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு; 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர்

கராச்சி: பாகிஸ்தானில் லாகூரில் இருந்து சென்ற பயணிகள் விமானம் கராச்சியில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில், சென்ற 107 பயணிகளில் 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   பாகிஸ்தானில் கொரோனாவை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்தும் சில கட்டுப்பாடுடன் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று லாகூரில் இருந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என 107 பேருடன் பிகே 303 என்ற விமானம் கராச்சி புறப்பட்டு சென்றது. பிற்பகல் 2.30 மணியளவில் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.தரையிறங்க ஒரு நிமிடம் இருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.  அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் ரேடாரின் பார்வையில் இருந்தது மறைந்தது. இதைத் தொடர்ந்து கராச்சியில் உள்ள மாலிர் என்ற இடத்தில் ஜின்னா கார்டன் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அப்போது, பலத்த சத்தத்துடன் புகை கிளம்பியது. அங்கிருந்த வீடுகள் மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்தது. இந்த விமான விபத்தில் 97 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காப்பாற்றி மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் வங்கி அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் உயிர் தப்பி உள்ளார்கள்.மேலும் இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விமானத்தின் கருப்பு பேட்டையை ஆய்வு செய்த பிறகே, விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை