கோஹ்லி, ஜடேஜா ஆறுதல்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு | மே 22, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி, ஜடேஜா ஆறுதல்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு | மே 22, 2020

புதுடில்லி: மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அம்பான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அம்பான் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோஹ்லி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் அனைவரையும் பாதுகாப்பார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

ஜடேஜா கூறுகையில், ‘‘ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,’’ என்றார்.

டேவிட் ஹசி கூறுகையில், ‘‘எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும், கோல்கட்டா நகரில் உள்ள மக்களிடம் உள்ளன. அவை, பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக அன்பை கொடுக்கும்,’’ என்றார்.

மூலக்கதை