கங்குலிக்கு ஆதரவு இல்லை * தெ.ஆப்ரிக்கா ‘பல்டி’ | மே 22, 2020

தினமலர்  தினமலர்
கங்குலிக்கு ஆதரவு இல்லை * தெ.ஆப்ரிக்கா ‘பல்டி’ | மே 22, 2020

ஜோகனஸ்பர்க்: ‘‘ஐ.சி.சி., புதிய ‘சேர்மன்’ விஷயத்தில் கங்குலிக்கு நாங்கள் ஆதரவு தரவில்லை,’’ என கிறிஸ் நென்ஜானி தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் உள்ளார். இவரது பதவிக்காலம் மே மாதத்துடன் முடிகிறது. அடுத்த சேர்மனாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக உள்ள கங்குலி வர வேண்டும் என, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) இயக்குனர் கிரீம் ஸ்மித் ஆதரவு தெரிவித்தார்.

தற்போது இவ்விஷயத்தில் சி.எஸ்.ஏ., தலைவர் கிறிஸ் நென்ஜானி ‘பல்டி’ அடித்துள்ளார். அவர் கூறியது:

பொதுவாக யாருக்கு ஆதரவு தருவது என்ற விஷயத்தில் ஐ.சி.சி., மற்றும் நமது கிரிக்கெட் போர்டின் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். சேர்மன் பதவிக்கு யார் போட்டியிடப் போகின்றனர் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. வேட்பாளர் யார் யார் என முடிவு செய்யப்பட்ட பின், யாருக்கு ஆதரவு தரலாம் என்பதை சி.எஸ்.ஏ., விதிகளின் படி முடிவெடுப்போம்.

உலக கிரிக்கெட்டில் மதிப்பு வாய்ந்தவர் கிரீம் ஸ்மித். கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார். தென் ஆப்ரிக்க அணியை மீண்டும் வெற்றிகரமாக மாற்றும் பணியினை செய்து வருகிறார். எங்கள் கிரிக்கெட் இயக்குனராக அவரது கருத்தின் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.

இப்போதைய நிலையில் கிரிக்கெட்டுக்கு தலைமை தாங்க, இவர் தான் சரியான வேட்பாளர் என யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை