உலக கோப்பை ரத்து செய்யப்படுமா * பின்னணியில் பி.சி.சி.ஐ., | மே 22, 2020

தினமலர்  தினமலர்
உலக கோப்பை ரத்து செய்யப்படுமா * பின்னணியில் பி.சி.சி.ஐ., | மே 22, 2020

புதுடில்லி: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை ரத்து செய்ய பி.சி.சி.ஐ., நெருக்கடி தருவதாக வெளியான செய்தியை அருண் துமால் மறுத்துள்ளார்.

இந்தியாவில் 13வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ரூ. 4,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் வரும் செப்.,–நவ.,ல் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிடுகிறது.

அதேநேரம் ஆஸ்திரேலிய மண்ணில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் அக்., 18–நவ., 15ல் நடக்கவுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக தொடர் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கால இடைவெளியில் ஐ.பி.எல்., தொடர் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே,‘ஐ.பி.எல்., தொடரை நடத்த வேண்டும் என்பதற்காக, ‘உலக’ தொடரை ரத்து செய்ய வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து நெருக்கடி தரப்படுகிறது,’ என ஆஸ்திரேலிய ‘மீடியா’ செய்தி வெளியிட்டது.

இதை மறுத்த பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் கூறியது:

வரும் ஐ.சி.சி., கூட்டத்தில் ‘உலக’ தொடரை நடத்த என்னென்ன வாய்ப்புள்ளது என ஆராய உள்ளோம். பிறகு ஏன் இதை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் தெரிவிக்கப் போகிறோம். ஒருவேளை ஆஸ்திரேலிய அரசு, நடக்கும் என அறிவித்தால், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அந்நாட்டு கிரிக்கெட் போர்டுக்கு உள்ளது.

மற்றபடி பல்வேறு அணிகளை ஆஸ்திரேலிய அரசு அனுமதிக்குமா, ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவார்களா என்பது குறித்தெல்லாம் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பி.சி.சி.ஐ., எவ்வித கருத்தும் தெரிவிக்காது.

தொடர் உறுதியா

இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென் ஆப்ரிக்கா செல்லும் என ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. இப்போதுள்ள அட்டவணைப் படி வரும் ஜூலை மாதம் இலங்கை, அடுத்து ஜிம்பாப்வே தொடர்கள் கூட நடக்குமா என உறுதியில்லாமல் உள்ளோம். 

அடுத்த இரு மாதத்தில் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடர் எப்படி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை