ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

தினமலர்  தினமலர்
ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

திருப்பூர்:ரெப்போ வட்டி குறைப்பு; கடன் செலுத்த கூடுதல் அவகாசம் உள்ளிட்ட ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கொரோனாவால், நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த, மூன்று மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது. இச்சூழலில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், ரெப்போ வட்டி எனப்படும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி, 4.40 சதவீதத்திலிருந்து, 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; வங்கி கடனை திருப்பிச் செலுத்த, மேலும் மூன்று மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்:ரெப்போ வட்டி குறைக்கப்பட்டிருப்பதால், நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக்கப்படும்.ஆயத்த ஆடை துறையினரின் தொடர் கோரிக்கையை ஏற்று, வங்கி கடன் திருப்பிச் செலுத்த கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நன்றி.
ரூபாய் மதிப்பில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கம், பேங்கிக் கிரெடிட் மீதான வட்டி சுமை, பார்வேர்டு கான்ட்ராக்டில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை பரிசீலித்து, அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:கோரிக்கையை ஏற்று, கடன் திருப்பிச் செலுத்த, மேலும் மூன்று மாதம் அவகாசம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூலை வரையிலான ஏற்றுமதிக்கான தொகையை பெறுவதற்கு, 15 மாதம்; இறக்குமதி பொருட்களுக்கான தொகையை, வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கு, ஓராண்டு அவகாசம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த மார்ச் 27, நிதி கொள்கையில், ரெப்போ வட்டியில், 0.75 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், வங்கிகளோ, வட்டியை வெறும் 0.43 சதவீத அளவிலேயே குறைத்தன. தற்போது, ரெப்போ வட்டி, 0.40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இதற்கேற்ப வங்கிகளும் வட்டியை குறைத்தால்தான், ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி குறைப்பக்கான உண்மையான நோக்கம் நிறைவேறும்.
இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபுதாமோதரன்: நிறுவனங்களின் நிதி நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், படிப்படியாகவே இயல்பு நிலைக்கு திரும்பும். எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் மிக அத்தியாவசியமானவை.நிறுவனங்களின் பண புழக்கத்துக்கு கைகொடுக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகளின்றி, தொழில்முனைவோர், வர்த்தகத்தில் மட்டும் முழு கவனம் செலுத்தமுடியும்.பொருளாதாரத்தை மீட்டெடுக்க, வட்டி குறைப்பு அவசியம் என்கிற தெளிவான முடிவெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அவ்வகையிலேயே தற்போதும், 0.40 சதவீதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது.உடனடியாக வட்டி குறைப்பை, வங்கிகள், நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் அவசியம்.

மூலக்கதை