கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பயிர்களை தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் ‘ஆன் தி வே டூ இந்தியா...’அடுத்த மாதம் ராஜஸ்தானை பதம் பார்க்கும்

தினகரன்  தினகரன்
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பயிர்களை தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் ‘ஆன் தி வே டூ இந்தியா...’அடுத்த மாதம் ராஜஸ்தானை பதம் பார்க்கும்

ஐக்கிய நாடுகள்: கிழக்கு ஆப்ரிக்காவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொடூரமான பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிக அழிவுகரமான புலம்பெயரும் பூச்சி இனம், பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 8 கோடி வெட்டுக்கிளி கூட்டம் சூழ்ந்து பயிர்களை படுநாசமாக்கி விடும். உலக நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு வேட்டு வைக்கும் இந்த பயங்கரமான வெட்டுக்கிளிகள், பலதரப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இருக்கும் இந்த காலகட்டத்திலும் கூட உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கின்றன. ஒவ்வொரு நாடாக கண்டம் விட்டு கண்டம் புலம் பெயரும் இந்த வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியாவை நோக்கி படையெடுப்பதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் வெட்டுக்கிளி முன்கணிப்பு அதிகாரி கிரெஸ்மென் கூறுகையில், ‘‘தற்போது கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் நோக்கி புலம்பெயர தொடரும்.இவை இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். வெட்டுக்கிளியை அழிக்க உலக நாடுகளுடன் ஐநா தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது,’’ என்றார். இந்தியாவில் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எதிர்கொள்ள தயார்* வெட்டுக்கிளிகளை சமாளிக்க இப்போதே ராஜஸ்தான் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. * இதற்காக அவசர திட்டமும் வகுத்துள்ளது.* தொலைதூர பகுதிகளில் டிரோன்கள் மூலம் பூச்சி மருந்துகள் தெளிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை