`ஸ்டாக் கிளியரன்ஸ்’ பாணியில் விற்பதா? ஸ்வீட் ஸ்டால் இனிப்பு போல் ஆகி விட்டது திருப்பதி லட்டு: தலைமை அர்ச்சகர் பரபரப்பு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
`ஸ்டாக் கிளியரன்ஸ்’ பாணியில் விற்பதா? ஸ்வீட் ஸ்டால் இனிப்பு போல் ஆகி விட்டது திருப்பதி லட்டு: தலைமை அர்ச்சகர் பரபரப்பு குற்றச்சாட்டு

* கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக 200 ஊழியர்களை அழைக்கப்பட்டு உள்ளனர். * லட்டு பிரசாதத்தை விற்கக் கூடாது. பக்தர்களுக்கு இலவசமாகவே  வழங்க வேண்டும் என்பது கோயில் ஆகம விதியாக உள்ளது.* தினமும் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.திருமலை: ‘‘திருப்பதி ஏழுமலையான் கோயில் வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. ஸ்டாக் கிளியரன்ஸ் போன்று லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,’’ என்று தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் பரபரப்பு குற்றம்சாட்டினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும், கோயிலில் நடைபெறக் கூடிய நித்திய பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. நித்திய பூஜைகளில் பயன்படுத்தக்கூடிய  பிரசாதங்கள் திருமலையில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக திருப்பதியில் கல்யாண உற்சவத்தில் பயன்படுத்தப்பட்ட 500 லட்டுகள், வடைகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற 25ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்கள், தகவல் மையங்களில் லட்டு பிரசாத விற்பனை தொடங்கப்பட உள்ளது.  இது குறித்து திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர்  தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயார் செய்யக்கூடிய லட்டு பிரசாதம் ஒன்று ரூ.50க்கு விற்கப்பட்டது வந்தது. இப்போது, ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ போல், 25க்கு விற்பனை செய்வதாகவும், பக்தர்கள் ஆர்டர் வழங்கினால் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் செய்து தருவதாகவும் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளதால், ஏழுமலையான் கோயில் பிரசாதம் ஸ்வீட் ஸ்டால் போன்று மாறி விட்டது. ஏழுமலையான் கோயில் வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் ஏழுமலையான் பக்தியை வியாபாரமாக மாற்றி, தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கட்டணத்தை வியாபார நோக்கில் உயர்த்தினார்கள். அதேபோல், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. இதுபோன்ற செயல்கள் மாநில அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். . எனவே, ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தின் மீது முதல்வர் ஜெகன் மோகன் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை