புதிய விதிமுறைகளுடன் மெல்ல திரும்பி வருகிறது பழைய கோவை!

தினமலர்  தினமலர்
புதிய விதிமுறைகளுடன் மெல்ல திரும்பி வருகிறது பழைய கோவை!

கோவையில் கொரோனா வைரசால், 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். புதிய தொற்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதையடுத்து ஆங்காங்கே கடைகள் திறக்கப்பட்டு, நகரம் பழைய நிலைக்கு மெல்ல, திரும்ப துவங்கியுள்ளது.சிறிய அளவிலான துணி கடைகள், செருப்பு கடைகள், மொபைல்போன் ரீசார்ஜ் மற்றும் பழுது நீக்கும் கடைகள், ஸ்வீட் கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், வாகன பழுது நீக்கும் ஒர்க் ஷாப் உள்ளிட்ட பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளன.
கடைகளில், பொருட்கள் வாங்க வரும் மக்கள் வாயிலாக, நோய் தொற்று பரவக்கூடாது என்பதற்காக, கடை உரிமையாளர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கோவைக்கு இது புதுசு!சில கடைகளில், வாடிக்கையாளர்கள் செருப்பு அணிந்து, கடைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. முகக்கவசம் இல்லாமல், யாருக்கும் அனுமதி இல்லை. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், சானிட்டைசர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கடையின் வாசலிலேயே, சானிட்டைசர் வைக்கப்பட்டு உள்ளது. என்னதான் இப்படி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினாலும், சமூக இடைவெளியைதான் நம் மக்கள் மறந்து விடுகின்றனர் என்கிறார், ஒரு கடை உரிமையாளர்.
இது குறித்து, கடை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:கோவையில் கொரோனா வைரஸ் இல்லை என அரசு அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் கடைகளுக்கு வரத்துவங்கி விட்டனர். ஆனாலும், பாதுகாப்பு கருதி, சில விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம். கைப்பைகள் கொண்டு வந்தால், அனுமதி கிடையாது.பர்ஸ் மற்றும் மொபைல்போன் மட்டுமே, உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கிறோம்.
வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலையும், பரிசோதனை செய்யப்படுகிறது. வியாபாரம் ஓரளவுக்கு பரவாயில்லை. மே 30க்குப் பின், பழைய கோவையை பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் பழைய கோவை!
சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, சில கடைகளில் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் மொபைல்போன் எண் கேட்டு வாங்குகின்றனர். கொரோனா தொற்று சந்தேகம் வந்தாலும், மற்ற நபர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்துவது இதன் வாயிலாக எளிதாகும் என்பதாலேயே, இந்த ஏற்பாடு.கோவை மக்கள் ஒவ்வொருவரும், அரசின் விதிமுறைகளை பின்பற்றினால், புதிய தெம்புடன் மீண்டு வரும், நம் கோவையை விரைவில் சந்திக்கலாம்!
வாடிக்கையாளர்களுக்கு கிளவுஸ்!
பிரபல பழக்கடையொன்றில், பழம், காய்கறி வாங்க வருபவர்களுக்கு, கிளவுஸ் வழங்கப்படுகிறது. இதை அணிந்து கொண்டுதான், அங்குள்ள பொருட்களை தொட முடியும். வெளியே வரும் முன், பயன்படுத்திய கிளவுசை கழற்றி, குப்பைக்கூடைக்குள் போட்டு விட வேண்டும். கிளவுசுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை பாராட்டலாம்.

மூலக்கதை