தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியது பாகிஸ்தானில் விமான விபத்து: 45 பயணிகள் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியது பாகிஸ்தானில் விமான விபத்து: 45 பயணிகள் பரிதாப பலி

கராச்சி: பாகிஸ்தானில் லாகூரில் இருந்து சென்ற பயணிகள் விமானம் கராச்சியில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில், சென்ற 107 பயணிகளில் 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   பாகிஸ்தானில் கொரோனாவை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்தும் சில கட்டுப்பாடுடன் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று லாகூரில் இருந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என 107 பேருடன் பிகே 303 என்ற விமானம் கராச்சி புறப்பட்டு சென்றது. பிற்பகல் 2.30 மணியளவில் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. தரையிறங்க ஒரு நிமிடம் இருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.  அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் ரேடாரின் பார்வையில் இருந்தது மறைந்தது. இதைத் தொடர்ந்து கராச்சியில் உள்ள மாலிர் என்ற இடத்தில் ஜின்னா கார்டன் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அப்போது, பலத்த சத்தத்துடன் புகை கிளம்பியது. அங்கிருந்த வீடுகள் மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்தது. இது பற்றி அறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களும் அங்கு விரைந்தனர். அப்போது 45 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விமான விபத்தை நேரில் பார்த்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில் ` விமானத்தின் இறக்கையில் தீப்பிடித்ததை தொடர்ந்து விமானம் சில வீடுகளின் மேல் மோதி தரையில் விழுந்து நொறுங்கியது,’’ என்றார். முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற விமானம் நடுவானில் விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் என 48 பேர் பலியான நிலையில் நேற்று நடைபெற்றது மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படுகிறது.

மூலக்கதை