ஊருக்கு போக முடியாத சோகமா? கிணற்றில் சடலமாக மிதந்த 9 வெளிமாநில தொழிலாளர்: 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

தினகரன்  தினகரன்
ஊருக்கு போக முடியாத சோகமா? கிணற்றில் சடலமாக மிதந்த 9 வெளிமாநில தொழிலாளர்: 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

திருமலை: தெலங்கானாவில் வடமாநில ெதாழிலாளி குடும்பத்தினர் உட்பட 9 பேரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது சொந்த ஊருக்கு போக முடியாத சோகத்தில் தற்கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் உள்ள கோரிகுண்டாவில்  சந்தோஷ் என்பவர் கோணி பை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மசூத்,  வாரங்கல்லில் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மேலும் இங்கு பீகார், திரிபுரா, ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் மசூத் அருகே உள்ள பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி வந்தார். அதே இடத்தில் பீகார், திரிபுரா மாநில இளைஞர்கள் சிலரும் தங்கி இருந்தனர்.இந்நிலையில்  தொழிற்சாலைக்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் நேற்று முன்தினம் மசூத் (50), அவரது மனைவி நிஷா (45), மகள் புஸ்ரா(20), அவரது 3 வயது மகன் ஆகிய 4 பேர் சடலமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாரங்கல் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை அதே பாழடைந்த கிணற்றில் மேலும் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மசூத்தின் மகன்கள் ஷாபத் (22), சுகைல் (20), பீகாரை சேர்ந்த ஷாம் (20), ராம் (20), பெயர் தெரியாத மற்றொருவர் என தெரியவந்தது. தகவல் அறிந்த வாரங்கல் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டனரா? அல்லது சொந்த ஊருக்கு போக முடியாத சோகத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை