காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி வீராங்கனையாகிறார்

தினகரன்  தினகரன்
காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி வீராங்கனையாகிறார்

தர்பங்கா: காயமடைந்த  தந்தையை வைத்துக்கொண்டு 1200கிமீ சைக்கிள் ஓட்டி வந்த  பீகார் சிறுமியை,  சைக்களில் பந்தய வீராங்கனையாக்க விளையாட்டுச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பீகார் மாநிலம்  சிர்ஹூல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்  மோகன் பஸ்வான்.  இவர் டெல்லி அருகில் உள்ள  அரியானா மாநிலம் குருகிராமில்   தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி  வந்தார்.  மார்ச் மாதம் அவர் விபத்தில் சிக்கியதால், தந்தையை கவனித்துக் கொள்ள  8ம் வகுப்பு மாணவியான  ஜோதிகுமாரி (15)   குருகிராம் சென்றார். அவர் சென்ற சிறிது நாட்களில்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தந்தையும் மகளும் குருகிராமிலேயே தங்க வேண்டி இருந்து. கையில் இருந்த காசெல்லாம் கரைய  இருவரும் ஊர் திரும்ப முடிவு செய்தனர். அதனையடுத்து கடன் வாங்கி குறைந்த விலையில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளனர். மே 10ம் தேதி குருகிராமில் இருந்து புறப்பட்டுள்ளனர்.  தந்தையை பின்பக்கம் உட்கார வைத்துக் கொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.  கூடவே  துணி, தண்ணீர் பை வேறு. வழியில் கிடைத்த, வாங்க முடிந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.   எளிய மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள கோவில், பேருந்து நிறுத்தங்களில் இரவில் தங்கியுள்ளனர். இடையே ஓய்வு எடுத்தாலும், தினமும் இரவில் 10 மணி வரையிலும்,  அதிகாலை 4 மணியிலிருந்தும் சைக்களில் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 8 நாட்கள் சுமார் 1200 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு பயணம் செய்து  மே17ம் தேதி கிராமத்தை சென்றடைந்தனர். அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சாகசம் வைரலாகப் பரவ ஊடகங்கள் அந்த கிராமத்தை முற்றுகையிட்டன.செய்தியாளர்களுடன் பேசிய மோகன், ‘ புராண கதைகளில் சிரவணகுமார் , பார்வையற்ற தனது பெற்றோரை தராசுக் கூடையில் சுமந்து சென்றதை கேள்விப்பட்டு இருக்கிறேன். எனது மகள்  ஜோதிகுமாரியும் என்னை சுமந்து வந்து  நவீன சிரவணகுமாராகி விட்டார். இனி சொந்த ஊரிலேயே பிழைப்பேன். மீண்டும் குருகிராம் செல்லமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.சைக்கிள் சங்கம் அழைப்புதேசிய சைக்கிள் விளையாட்டு கூட்டமைப்பு, ஜோதிகுமாரியின் அசாத்தியமான திறமையை பார்த்து அசந்து போயிருக்கிறது. கூட்டமைப்பு தலைவர் ஓங்கார் சிங், ‘சிறுமியின் திறமை அவரை சிறந்த சைக்கிள் பந்தய வீராங்கனையாக மாற்ற உள்ளது. அதற்காக டெல்லியில் உள்ள தேசிய  சைக்கிளிங் அகடமியில் பயிற்சி  அளிக்க முடிவு செய்துள்ளோம். முன்னதாக தேர்வு முகாமில் பங்கேற்க வரும்படி ஜோதிகுமாரியிடமும், அவரது தந்தையிடமும் பேசிவிட்டோம்.  அடுத்த மாதம் அல்லது இந்த ஊரடங்கு முடிந்ததும்  டெல்லிக்கு எங்கள் சொந்த செலவில் அழைத்து வருவோம்.  தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நாங்களே செய்து தருவோம்’ என்று  உறுதி அளித்துள்ளார். ஊரடங்கு,  ஒரு சைக்கிள் வீராங்கனையை இந்தியாவுக்கு அடையாளம் காட்டியுள்ளது. இப்படி பல நூறு கி.மீ. தொலைவை நடந்தே கடந்து கொண்டிருக்கும் மக்களிடம் இருந்து மாரத்தான், நடை ஓட்டம் ஆகிய போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகளையும் கண்டறியலாம்.பட்டை தீட்டாத வைரங்கள்…எளிய மக்களிடம்  இருக்கும் உடல் வலிமை எப்போதும் குப்பை அள்ளவும், சுமை தூக்கவும் மட்டுமே பயன்படுகின்றன. அதனை விளையாட்டுக்கு பயன்படுத்தினால், இந்தியா  பதக்கங்களை அள்ளும் என்பது பல ஆண்டு வலியுறுத்தல். ஒரு சிலர் அவர்களாகவே சொந்த முயற்சியில் திறமையை நிரூபித்தால், வேறு வழியில்லாமல் வாய்ப்பு தருகின்றனர். ஆனால் அந்த வாய்ப்பும் தொடர்ந்து கிடைப்பதில்லை.  எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் வறுமையில் இருந்தாலும்  சர்வதேச தடகளப் போட்டிகளில் தங்கங்களை அள்ளுகின்றனர்.  ஜோதிகுமாரி முழு வீராங்கனையாக மாற இன்னும் பல்வேறு படிகளைத் தாண்ட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை