ராயபுரத்தை தொடர்ந்து திரு.வி.க.நகரும் 1,000 கடந்தது; பீதியில் வடசென்னை மக்கள்

தினமலர்  தினமலர்
ராயபுரத்தை தொடர்ந்து திரு.வி.க.நகரும் 1,000 கடந்தது; பீதியில் வடசென்னை மக்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியில், வட சென்னையில் அதிவேகம் பரவும் தொற்றால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள் உள்ளன. இதில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்துார் என, ஏழு மண்டலங்களை உள்ளடக்கிய, வட சென்னையில் கொரோனா கோரதாண்டவமாடி வருகிறது.

மாநகராட்சியில் முதன் முறையாக, சில நாட்களுக்கு முன், வட சென்னையின் ராயபுரம் மண்டலத்தில், தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை, 1,000த்தை கடந்து, கலக்கமடைய செய்தது. இதைதொடர்ந்து, நேற்று, வட சென்னையில், திரு.வி.க.நகர் மண்டலத்திலும், தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை, 1,000த்தை கடந்து, பீதியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு, 1,032 பேர் தொற்றுக்குக்கு ஆளாகியுள்ளனர்.இரு மண்டலங்களில் எண்ணிக்கை, 1,000த்தை கடந்த நிலையில், தண்டையார்பேட்டையில், 823 பேர் என்ற அளவில் உள்ளது. விரைவில், அந்த மண்டலமும், 1,000த்தை நெருங்க கூடும்.

திருவொற்றியூர், 228; மணலி, 115; மாதவரம், 186; அம்பத்துார், 376, என, ஏழு மண்டலங்களை உள்ளடக்கிய, வட சென்னையில், பாதிப்பு எண்ணிக்கை, 4,459 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில், 50.70 சதவீதமாகும்.தென்சென்னையின், கோடம்பாக்கத்தில், 1,231 பேர் உட்பட, எட்டு மண்டலங்களில், பாதிப்பு எண்ணிக்கை, 4,291 எனவும், சதவீதம் 48.78 ஆகவும் உள்ளது. வடசென்னை வாசிகளை கலங்கடிக்கும் கொரோனா தொற்றால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மூலக்கதை