அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை

தினமலர்  தினமலர்
அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை

புதுடில்லி:‘அமேசான்’ நிறுவனம், தற்காலிகமாக, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, பொது இடங்களுக்கு வர தயங்குபவர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இதனால், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தேவை அதிகரித்துஉள்ளது. இதையடுத்து, அமேசான், அதன் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நிலைமையை சமாளிக்க, 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக நியமிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இது குறித்து, அமேசான் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:ஊரடங்கு உத்தரவு பல பகுதிகளில் தளர்த்தப்பட்டிருப்பினும், பொருட்களை வாங்க வெளியே வரத் தயங்குபவர்கள், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, பெற்றுகொள்கிறார்கள். தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, 50 ஆயிரம் பேரை கிடங்குகள், வினியோகம் ஆகிய பிரிவுகளில் தற்காலிகமாக நியமிக்க இருக்கிறோம். பகுதி நேர வேலையிலும் சேர முடியும்.

தற்காலிகமாக நியமிக்கப்படும் இவர்கள், ஏற்கனவே பணியாற்றி வருபவர்களுக்கு, பொருட்களை எடுப்பது, பார்சல் செய்வது, அனுப்புவது, டெலிவரி கொடுப்பது உள்ளிட்டவற்றில் உதவுவார்கள்.இவ்வாறு அமேசான் தெரிவித்துள்ளது.

மூலக்கதை