ஒடிசாவைப் புரட்டி போட்ட அம்பன் புயல்: நிவாரணத் தொகையாக ரூ.500 கோடி; பிரதமர் மோடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஒடிசாவைப் புரட்டி போட்ட அம்பன் புயல்: நிவாரணத் தொகையாக ரூ.500 கோடி; பிரதமர் மோடி அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவைப் புரட்டிப் போட்ட அம்பன் புயல் சேதங்களை இன்று பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.500 கோடியை முன் - நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார். இதே அம்பன் புயல் கோரத்தாண்டவம் ஆடிய மேற்கு வங்கத்தையும் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் விமானம் மூலம் ஒடிசா புயல் சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா ஆளுநர் கணேஷி லால் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும் நீண்டகால மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிவாரணத் தொகையும் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். மாநில அரசு விரிவான சேத விவரங்கள், நடவடிக்கைகள்,மறுவாழ்வுத் திட்டங்களை அனுப்பினால் கூடுதல் உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.ஜகத்சிங்பூர், கேந்திரபுரா, பத்ரக், பலாசொர், ஜஜ்பூர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களையும் தலைவர்கள் பார்வையிட்டனர். பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்க்ள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி, ஆகியோரும் உடனிருந்தனர். ஒடிசா அரசு முன் கூட்டியே நல்ல தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படாமல் தடுத்ததாகப் பாராட்டிய பிரதமர் மோடி, வீடுகள், மின்சாரம், உள்கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு புயல் சேதம் விளைவித்திருப்பதாக தெரிவித்தார். ஒடிசா நிர்வாகம், மக்கள், முதல்வர் ஆகியோரை உயிர்களை காப்பாற்றியதற்காக பாராட்டிய முதல்வர், கோவிட்-19-ஐ எதிர்த்து அனைவரும் போராடி வரும் நிலையில் இந்த பேரிடர் பெரிய சவால்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தியதாக மோடி தெரிவித்தார்.

மூலக்கதை