ரெப்போ வட்டி குறைப்பு : கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி

தினமலர்  தினமலர்
ரெப்போ வட்டி குறைப்பு : கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி குறைப்பு
மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது: பொருளாதார சூழ்நிலையை ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. உலக பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும். உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பருப்பு விலை அதிகமாகலாம்
வேளாண் துறை வளர்ச்சி, நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. மானாவாரி சாகுபடி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம். உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் பண வீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி மார்ச்சில் 17 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை இந்தாண்டு இல்லை.

ரூ.15 ஆயிரம் கோடி
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி அளிக்கப்படும். சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது

கூடுதல் அவகாசம்
கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாகவும், கொரோனா இடையூறு காரணமாகவும் கடன் தவணைகளை செலுத்துவதற்கான அவகாசம் ஜூன் 1 முதல் ஆக.,31 வரை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடன் தவணையை செலுத்த ஏற்கனவே 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை