டி.என்.பி.எல்., ஒத்திவைப்பு: கொரோனா வைரஸ் அச்சத்தால் | மே 18, 2020

தினமலர்  தினமலர்
டி.என்.பி.எல்., ஒத்திவைப்பு: கொரோனா வைரஸ் அச்சத்தால் | மே 18, 2020

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக டி.என்.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் கடந்த 2016ல் துவங்கப்பட்டது. சேப்பாக்கம், துாத்துக்குடி, கோவை, திண்டுக்கல் டிராகன்ஸ் என 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இதுவரை சேப்பாக்கம் அணி இரண்டு முறை (2017, 2019), துாத்துக்குடி (2016), மதுரை (2018) அணிகள் சாம்பியன் கோப்பை வென்றன. இதன் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடக்க இருந்தது. 

ஆனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஐ.பி.எல்., உட்பட பல்வேறு முக்கிய தொடர்கள் உட்பட ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் முடங்கின.

இதற்கு டி.என்.பி.எல்., தொடரும் தப்பவில்லை. வரும் ஐந்தாவது சீசனை ஒத்தி வைப்பதாக தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) அறிவித்தது. வரும் செப். 15ம் தேதிக்குப் பின் இத்தொடரை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதா, இல்லை ரத்து செய்வதா என முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

இதுகுறித்து டி.என்.சி.ஏ., செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி கூறுகையில், ‘‘தமிழக கிரிக்கெட் சங்கம், வரும் ஜூன் 10ல் துவங்க இருந்த 5வது டி.என்.பி.எல்., தொடரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதிய தேதி பின்னர் வெளியாகும்,’’ என்றார்.

மூலக்கதை