இந்திய வீரர்கள் பயிற்சி எப்போது * என்ன சொல்கிறது பி.சி.சி.ஐ. | மே 18, 2020

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்கள் பயிற்சி எப்போது * என்ன சொல்கிறது பி.சி.சி.ஐ. | மே 18, 2020

 புதுடில்லி: ஊரடங்கில் தளர்வு அறிவித்த போதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் துவங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. 13வது ஐ.பி.எல்., தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் படி ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி தரப்பட்டது.

இதனால் இந்திய வீரர்கள் பயிற்சி முகாம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பொருளாளர் அருண் துமால் கூறியது:

வரும் மே 31 ம் தேதி வரை விமான போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடத்துவதில் பி.சி.சி.ஐ., அவசரம் காட்டவில்லை. காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.

அதேநேரம் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யத் தேவையான ‘அட்வைஸ்களை’ தயாரித்து வருகிறோம். தற்போதுள்ள சூழலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதும் இந்திய அணிக்கான திட்டத்தை தயாரிக்க பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது.

ஏனெனில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது. தவிர கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி விடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை