‘வேகங்களை’ சமாளித்தது எப்படி * காரணத்தை சொல்லும் கோஹ்லி | மே 19, 2020

தினமலர்  தினமலர்
‘வேகங்களை’ சமாளித்தது எப்படி * காரணத்தை சொல்லும் கோஹ்லி | மே 19, 2020

புதுடில்லி: ‘‘சர்வதேச போட்டிகளில் ‘வேகங்களை’ சமாளித்து இந்திய அணியின் பேட்டிங் முன்னேறியதற்கு சிறப்பு பயிற்சியாளர் ராகவேந்திரா தான் காரணம்,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இந்திய அணி சமீப காலங்களில் அன்னிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. 72 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. நியூசிலாந்தில் ‘டுவென்டி–20’ தொடரை கைப்பற்றியது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி 31, கூறியது:

கடந்த 2013க்குப் பின் இந்திய அணியின் பேட்டிங், எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் சிறப்பு பயிற்சியாளர் ராகவேந்திரா தான் காரணம் நம்புகிறேன்.

வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ப பேட்டிங் எப்படி செய்ய வேண்டும் என்பதில் நல்ல திட்டங்கள் வைத்துள்ளார். வலை பயிற்சியில் ‘சைடுஆர்ம்’ எனும் கிரிக்கெட் உபகரணத்தை பயன்படுத்தி பந்தை மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் வீசுவார். இவரிடம் பயிற்சி எடுத்துவிட்டு, பிறகு போட்டியில் விளையாடும் போது, ‘வேகங்களை’ சமாளிப்பது எளிதாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் எனது திறமை மீது சந்தேகம் கொள்ள மாட்டேன். பொதுவாக மனிதனாக உள்ள அனைவருக்கும் சந்தேகங்களும், பலவீனங்களும் உள்ளன. எதிர்மறை எண்ணங்களும் இருக்கும்.

பேட்டிங் எப்படி

அன்னிய மண்ணில் பேட்டிங் பயிற்சி செய்யும் போது, சரியாக வரவில்லை என்றால் எல்லாம் முடிந்து விட்டது போல எண்ணக்கூடாது. அந்த சந்தேகம் அப்படியே மனதிற்குள் செல்லும். இதுபோன்ற தவறுகளை சிறிய கவனச்சிதறல்களாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போட்டியின் சூழ்நிலை குறித்து அதிகம் சிந்திக்கத் தேவையில்லை.  உங்களது பங்கினை அறிந்து  செயல்படாத பட்சத்தில் எதிர்மறையான கருத்துக்கள், களத்துக்கு வெளியே இருந்து வரத் தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

சிறு வயது கனவு

‘சேஸ்’ செய்வது குறித்து கோஹ்லி கூறுகையில்,‘‘சிறுவனாக இருந்த போது இந்திய அணி தோற்பதை பார்ப்பேன். இரவு துாங்கச் செல்லும் போது, நானாக இருந்திருந்தால் இப்போட்டியை வெற்றி பெறச் செய்திருப்பேன், என சொல்வேன். இதனால் தான் 380 ரன்களை ‘சேஸ்’ செய்ய வேண்டும் என்றாலும், அது ஒருபோதும் முடியாது என நினைக்க மாட்டேன்,’’ என்றார்.

 

மூலக்கதை