பவுலர்களுக்கு காத்திருக்கும் சவால்: என்ன சொல்கிறார் ஹர்பஜன் | மே 20, 2020

தினமலர்  தினமலர்
பவுலர்களுக்கு காத்திருக்கும் சவால்: என்ன சொல்கிறார் ஹர்பஜன் | மே 20, 2020

புதுடில்லி: ‘‘பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்படும் பட்சத்தில் அது பவுலர்களுக்கு சவாலானது,’’ என, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. கிரிக்கெட்டில் வீரர்கள் கைகுலுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய சுழல் ‘ஜாம்பவான்’ கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கமிட்டி, ‘பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை, வியர்வையை பயன்படுத்தி அனுமதி,’ என பரிந்துரை அளித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் கூறியது: 

பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு தடை விதித்தால் பவுலர்களுக்கு சிக்கலாகிவிடும். குறிப்பாக இந்திய துணைக் கண்டங்களில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனெனில் பந்தை ‘சுவிங்’ செய்வது கடினமாகிவிடும்.

வியர்வையை கொண்டு புதிய பந்தை மட்டுமே பளபளப்பாக்க முடியும். பழைய பந்தின் மீது வியர்வையை பயன்படுத்தினால், அது பந்தை ஈரப்படுத்தி கனத்தை அதிகரிக்கும். எச்சில் கடினமாக இருப்பதால் அதனை மீண்டும், மீண்டும் தேய்க்கும் போது பந்தின் மீதுள்ள தோல் பிரகாசிக்க உதவுகிறது.

வரும் காலங்களில் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்த அனுமதிக்கலாம். இதன்மூலம் ஒரு பந்தில் ‘ரிவர்ஸ் சுவிங்’ செய்யவும், ஒரு பந்தில் ‘சுவிங்’ செய்யவும் முடியும். அந்த இரண்டு பந்துகளையும் 90 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் 50 ஓவர்களுக்கு பின், இரண்டும் பழையதாகிவிடும் என்பதால் மாற்றிவிட வேண்டும்.

இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

மூலக்கதை