உணவு வழங்கினார் சர்பராஸ் கான் | மே 20, 2020

தினமலர்  தினமலர்
உணவு வழங்கினார் சர்பராஸ் கான் | மே 20, 2020

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். 

டில்லியில் இருந்து மும்பைக்கு திரும்பிய இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் 22, உணவு வழங்கினார்.

மும்பையை சேர்ந்த சர்பராஸ் கான், அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவர், கடந்த ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் முச்சதம் மற்றும் இரட்டை சதம் விளாசினார்.

இதுகுறித்து சர்பராஸ் கான் கூறுகையில், ‘‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூட்டாக உதவிட வேண்டும் என்று எனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினேன். அருகில் உள்ள நண்பர்களை அழைத்து, அவர்களுக்கு எப்படி உணவை விநியோகிப்பது என்று திட்டமிட்டோம். நிறைய பேர் காலில் செருப்பு கூட அணியாமல் நடந்து வந்ததை பார்க்க முடிந்தது,’’ என்றார்.

ஏற்கனவே, ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் தஜிந்தர் சிங் திலான், இதுபோல புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார்.

மூலக்கதை