சச்சினை விட சிறந்தவரா கோஹ்லி: காம்பிர் கணிப்பு எப்படி | மே 21, 2020

தினமலர்  தினமலர்
சச்சினை விட சிறந்தவரா கோஹ்லி: காம்பிர் கணிப்பு எப்படி | மே 21, 2020

மும்பை: ‘‘ஒருநாள் போட்டியில் கோஹ்லியை விட சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன்,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 47. இவர், 463 ஒருநாள் போட்டியில் 49 சதம் உட்பட 18,426 ரன்கள் (சராசரி 44.83) குவித்துள்ளார். தற்போதைய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 31, இதுவரை 248 ஒருநாள் போட்டியில் 43 சதம் உட்பட 11,867 ரன்கள் (59.33) எடுத்துள்ளார். 

இதுகுறித்து காம்பிர் கூறியது: 

என்னைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் கோஹ்லியை விட சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன். இப்படி சொல்வது கடினமானது. ஏனெனில் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் அப்போது இருந்ததை விட இப்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அதிக மாற்றங்கள் உள்ளன.

சச்சின் விளையாடிய போது போட்டியில் ஒரே ஒரு வெள்ளை பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது 2 வெள்ளை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்போது ‘பீல்டிங்’ விதிமுறைகள் கடுமையாக இருந்தன. முதல் 15 ஓவரில் வட்டத்திற்கு உள்ளே 4 ‘பீல்டர்கள்’ நிற்க வேண்டும். வெளியே 5 ‘பீல்டர்களுக்கு’ அனுமதி கிடையாது. தற்போது 3 ‘பவர் பிளே’ ஓவர்கள் உள்ளன. 

இது, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. தவிர, இருபக்கமும் புதிய பந்து என்பதால் ‘ரிவர்ஸ் சுவிங்’ செய்வதற்கு வாய்ப்பு இல்லை, ‘ஆப்–ஸ்பின்னர்களுக்கு’ சாதகமான சூழ்நிலை கிடையாது. இதனால் கோஹ்லி உள்ளிட்டோர் நிறைய ரன் சேர்க்கின்றனர்.

சச்சின் விளையாடி காலத்தில் 230 முதல் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற போதுமான இலக்காக இருந்தது. நீண்ட நாள் விளையாடியதற்காகவும், அப்போதிருந்த கடினமான விதிமுறைகளுக்காகவும் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சினை தேர்வு செய்கிறேன்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

மூலக்கதை