ஐ.பி.எல்., மீது ஆர்வம் ஏன்: பாட் கம்மின்ஸ் கருத்து | மே 21, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., மீது ஆர்வம் ஏன்: பாட் கம்மின்ஸ் கருத்து | மே 21, 2020

மெல்போர்ன்: ‘‘உலக கோப்பைக்கு (‘டுவென்டி–20’) தயாராக உதவும் என்பதால் ஐ.பி.எல்., தொடரில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என, பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், 13வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தொடர் வரும் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரும் அக். 18 – நவ. 15ல் நடக்கவுள்ளது. இத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 27, ஐ.பி.எல்., தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இவர், இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கோல்கட்டா அணி சார்பில் அதிகபட்சமாக ரூ. 15.5 கோடிக்கு ஒப்பந்தமானார்.

இதுகுறித்து கம்மின்ஸ் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்கு பல வெளிப்படையான காரணங்கள் உள்ளன. இத்தொடர் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அணியின் உரிமையாளர்கள், என்னிடம் கூறினர். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்ததால், இத்தொடர் மூலம் கிடைக்கும் அனுபவம் சர்வதேச போட்டிக்கு திரும்ப உதவும். குறிப்பாக ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட கைகொடுக்கும். ஏனெனில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்பதால் இத்தொடருக்கான போட்டிகள் சர்வதேச தரத்திற்கு உள்ளன. மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தயாராக உள்ளேன்.

இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

மூலக்கதை