‘ஜெர்சி’ எண் ‘228’: வெளியான பாண்ட்யா ரகசியம் | மே 21, 2020

தினமலர்  தினமலர்
‘ஜெர்சி’ எண் ‘228’: வெளியான பாண்ட்யா ரகசியம் | மே 21, 2020

புதுடில்லி: ஹர்திக் பாண்ட்யா பயன்படுத்தி ‘ஜெர்சி’ எண் 228 க்கு, காரணம் தெரியவந்துள்ளது.

இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 26. மும்பையை சேர்ந்த இவர், கடந்த 2016ல் சர்வதேச ‘டுவென்டி–20’ மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவரது ‘ஜெர்சியில்’ 228 என்ற ‘நம்பர்’ இடம் பெற்றிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு புள்ளியியல் நிபுணர் மோகன்தாஸ் மேனன் பதில் தெரிவித்துள்ளார். கடந்த 2009, டிச. 9ல் மும்பை அணிக்கு எதிரான விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் (16 வயது) பரோடா அணியை வழிநடத்திய இவர், 8 மணி நேரம் ‘பேட்டிங்’ செய்து 391 பந்தில் 228 ரன்கள் குவித்தார். இது, தற்போது வரை இவர் அடித்த ஒரே இரட்டை சதம் மற்றும் இவரது அதிகபட்ச ரன்னாக உள்ளது.

இதுகுறித்து பாண்ட்யாவின் பயிற்சியாளர் ஜிதேந்திரா கூறுகையில், ‘‘இத்தொடர், ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் பயணத்தை துவக்கிய முதல் சீசன். இப்போட்டியில் ‘பேட்டிங்’ மட்டுமின்றி ‘பவுலிங்கிலும்’ அசத்தினார். ஐந்து விக்கெட் கைப்பற்றிய இவர், சிறந்த ‘ஆல்–ரவுண்டராக’ அடையாளம் காட்டப்பட்டார். இதன்பின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாட தேர்வானார்,’’ என்றார்.

ஆனால் ஹர்திக் பாண்ட்யா, நீண்ட காலம் 228 என்ற எண் இடம் பெற்றிருந்த ‘ஜெர்சி’யை பயன்படுத்தவில்லை. கடந்த 2016 முதல் இவரது ‘ஜெர்சியில்’ 33 என்ற எண் இடம் பெற்றுள்ளது.

 

மூலக்கதை