முழுநேர கீப்பரா லோகேஷ் ராகுல்?: முகமது கைப் எதிர்ப்பு | மே 21, 2020

தினமலர்  தினமலர்
முழுநேர கீப்பரா லோகேஷ் ராகுல்?: முகமது கைப் எதிர்ப்பு | மே 21, 2020

புதுடில்லி: ‘‘லோகேஷ் ராகுலை முழுநேர விக்கெட் கீப்பராக பயன்படுத்த கூடாது,’’ என, முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இவரது இடத்துக்கு இளம் வீரர் ரிஷாப் பன்ட் பொருத்தமாக இருப்பார் என பார்க்கப்பட்டது. 

ஆனால் அடுத்தடுத்த சொதப்ப, வாய்ப்பு லோகேஷ் ராகுலுக்கு சென்றது. இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, விக்கெட் கீப்பராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் கூறியது: 

நீண்ட நாட்களாக போட்டியில் பங்கேற்காத தோனி, ஐ.பி.எல்., தொடரில் திறமையை நிரூபித்தால் அணிக்கு திரும்பலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ‘மேட்ச் வின்னரான’ தோனிக்கு, நெருக்கடியான நேரத்தில் பேட்டிங் வரிசையில் 6 அல்லது 7வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடத் தெரியும். இவர் இன்னும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ‘நம்பர்–1’ வீரரான இவருக்கு நேரடியாகவே அணியில் இடம் கிடைக்கலாம்.

லோகேஷ் ராகுல் சிறந்த பேட்ஸ்மேன். இவரை முழுநேர விக்கெட் கீப்பராக பயன்படுத்த கூடாது. ஒருவேளை ‘ரெகுலர்’ கீப்பர் காயமடைந்தால் இவரை மாற்று கீப்பராக களமிறக்கலாம். ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரையும் தோனியின் இடத்தில் களமிறக்க முடியாது. சச்சின், டிராவிட் ஆகியோருக்கு மாற்றாக கோஹ்லி, ரோகித், ரகானே, புஜாரா கிடைத்தனர். ஆனால் தோனிக்கு நிகரான மாற்று விக்கெட் கீப்பர் இன்னும் கிடைக்கவில்லை. இவர் தான் ‘நம்பர்–1’ விக்கெட் கீப்பராக தொடர்கிறார்.

இவ்வாறு கைப் கூறினார்.

மூலக்கதை