கிராமத்தை தடியுடன் காக்கும் வீர பெண்கள்

தினகரன்  தினகரன்
கிராமத்தை தடியுடன் காக்கும் வீர பெண்கள்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 45 மண்டலங்கள், கொரோனாஅபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 26 பகுதிகள் காஷ்மீரிலும், மற்றவை ஜம்முவிலும் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் காஷ்மீரில் 3 பேர் இறந்துள்ளனர். ஜம்முவில் முதன் முதலாக 61 வயது பெண் இறந்துள்ளார். ஜம்முவில் பல கிராமங்களில் எல்லையில் முள்வேலி அமைத்து யாரும் வெளியேறாமல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக பெண்களும் களத்தில் குதித்துள்ளனர். ஜம்மு நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டா பிண்ட் கிராமத்தில், அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குர்மீத் கவுர் என்ற பெண் தலைமையில், கையில் தடியுடன் பெண்கள் ரோந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 6,500 பேர் வசிக்கின்றனர். ரோந்து பணி குறித்து இந்த பெண்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தை பாதுகாக்க போலீசார் போதாது. அதனால்தான் நாங்களும் களத்தில் குதித்துள்ளோம். எங்களை மீறி யாரும் வெளியில் செல்லவோ, வெளியாட்கள் உள்ளே வரவோ முடியாது. எங்கள் கிராமத்தை பாதுகாக்க எங்களால் முடிந்த தொண்டு இது,’’ என்றனர்.

மூலக்கதை