கொரோனா வைரசை மதிக்காத கொரிய நாடுகள்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசை மதிக்காத கொரிய நாடுகள்

தென் கொரியாவும், வடகொரியாவும் பரம எதிரிகள். இரு நாடுகளும் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. சீனாவுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் உலக நாடு தென் கொரியாதான். அப்படி இருந்தும் தென் கொரியாவும், வடகொரியாவும் கொரோனாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், அந்த நாடுகளில் ஒன்று பொதுத்தேர்தலை நடத்துகிறது. மற்றொன்று, ராணுவ பலத்தை அதிகரிக்க தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.கொரோனா பீதியால் உலகமே ஊரடங்கில் இருக்கும் நிலையில், தென் கொரியா மட்டும் திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் 15ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், முன்கூட்டிய 2 நாள் சிறப்பு தேர்தல் நேற்று தொடங்கியது.   வாக்காளர்கள் 3 அடி இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் முகக் கவசம் அணிந்தபடி வந்தனர். அவர்களுக்கு சானிடைசர் தரப்பட்டு கைகள் சுத்தப்படுத்திய பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதோடு, நோய் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலேயே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு கொரோனா நோயாளிகள் முழு கவச உடை அணிந்தபடி வாக்களித்தனர். அவர்களுக்கு சிகிச்சை தரும் டாக்டர்களும் வாக்குப்பதிவு செய்தனர். முதல் நாளில் 53 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் தினத்திற்கு முன்பாக முன்கூட்டி நடக்கும் வாக்குப்பதிவில் பதிவான அதிக வாக்குகள் இவை என அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. தென் கொரியாவில் ஆரம்பத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவினாலும், மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியதால், அந்நாட்டால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை