அமெரிக்காவில் 3 நாளில் 6,000 பேர் சாவு: கொரோனா பலி 1 லட்சத்தை நெருங்கியது: சீனாவில் 2வது ரவுண்டு வருகிறதா வைரஸ்?

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் 3 நாளில் 6,000 பேர் சாவு: கொரோனா பலி 1 லட்சத்தை நெருங்கியது: சீனாவில் 2வது ரவுண்டு வருகிறதா வைரஸ்?

வாஷிங்டன்: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 3 நாளில் சுமார் 6,000 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சீனாவில் மீண்டும் புதிதாக வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசின் மையப் புள்ளியாக மாறி உள்ள அமெரிக்காவில் கடந்த 3 நாட்களாக பலி எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. தொடர்ந்து 2 நாட்களாக ஒவ்வொரு நாளும் 2,000 பேர் பலியான நிலையில், நேற்று முன்தினமும் பலியானோர் எண்ணிக்கை 1,900 ஆக அதிகரித்தது. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் பலியானோர் பட்டியலில் ஸ்பெயினை முந்தியுள்ள அமெரிக்கா, 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் புதிதாக பாதித்தோர் எண்ணிக்கை 33 ஆயிரமாகும். அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். அந்நகரில் மட்டுமே 7,067 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். நியூஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சீனாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வீசி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 63 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 42 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.  வுகானில் 76 நாள் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மெதுவாக புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கிறது. இதனால், குணமடைந்த அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் கொரோனா பரவலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த பரிசோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மொத்த பலி 97 ஆயிரத்து 200 ஆக இருந்தது. உலகளவில் மொத்தம் 16 லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்பெயின், இத்தாலி, நியூயார்க்கில் ஆறுதல் தரும் விஷயம்:அமெரிக்காவில் கொரோனா பலி, பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், அங்கு ஒரு ஆறுதலான விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் புதிதாக வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. சமூக விலகல், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டதன் பலனாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் படிப்படியாக பலி எண்ணிக்கை குறையும் என்றும் நியூயார்க் மேயர் ஆண்ட்ரூ கியூமோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதேபோல், ஸ்பெயின், இத்தாலியிலும் பலி மற்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது. ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 17 நாட்களில் குறைவான பலி எண்ணிக்கையாகும். அங்கு மொத்தம் 15,843 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் நேற்று முன்தினம் 610 பேர் இறந்தனர். 18,279 பேருடன் இத்தாலி பலி எண்ணிக்கை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.மருந்து தந்த இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி:கடந்த 3ம் தேதி தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கொரோனாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று இந்த மருந்தை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உட்பட 5 டன் மருந்துகள், இஸ்ரேலுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன. இதற்கு நன்றி தெரிவித்து  நெதன்யாகு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அன்புக்குரிய நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. குளோரோகுயின் மருந்தை அனுப்பியதற்காக அனைத்து இஸ்ரேல் மக்களும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்,’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இந்த சவாலான நேரத்தில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு மேலும் வலுவடைந்து உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நட்பு நாடுகளுக்கு முடிந்த அளவுக்கான மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருக்கிறது,’ என்று கூறியுள்ளார்.3 வாரத்தில்  1.6 கோடி பேர் வேலையிழப்பு:அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 97 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கடந்த 3 வாரத்தில் மட்டும் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 66 லட்சம் பேர் வேலை இல்லாதோருக்கான அரசின் சலுகையை பெற புதிதாக விண்ணப்பித்து உள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ‘‘நம் நாட்டின் பொருளாதாரம் மிக சிறப்பான இடத்தை எட்டும். அடுத்த சில மாதங்களில் மிக வலுவடையும். அதற்கான ஊக்குவிப்பு திட்டங்களை அரசு கொண்டுள்ளது,’’ என்றார்.இந்தியாவுக்கு 12 விமானம் அனுப்பும் இங்கி.இந்தியாவில் சிக்கி தவிக்கும் 3,000க்கும் மேற்பட்ட இங்கிலாந்து மக்களை மீட்க 12 விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது. அந்த விமானங்கள் மூலம் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தென் இந்தியாவில் தங்கி உள்ள இங்கிலாந்து நாட்டவர்கள் மீட்கப்படுவார் என வெளியுறவு அமைச்சர் தாரிக் அகமது கூறினார். ஏற்கனவே 7 விமானங்கள் மூலமாக கடந்த வாரம் கோவா, மும்பை, டெல்லியில் இருந்து 2,000 இங்கிலாந்து நாட்டவர்கள் தாய்நாடு திரும்பினர். சாதாரண வார்டுக்கு மாறினார் போரிஸ்:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த ஞாயிறன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது போரிசின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் ஐசியு.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். குணமாகும் தொடக்க நிலையில் உள்ள அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த சமயத்தில் அவர் முழு ஓய்வு எடுப்பது அவசியம்’’ என்றார். உலக நாடு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் நபர் போரிஸ் ஆவார். இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவால் 8,021 பேர் பலியாகி உள்ளனர்.சீன மார்க்கெட்டை மூடுங்க... அமெரிக்க எம்பி.க்கள் கடிதம்கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் நிலையில், அதன் ஆரம்ப புள்ளியான சீனாவின் வுகான் நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. இதனால் அங்கு மீண்டும் மீன், இறைச்சி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கடல் உணவு மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், உடனடியாக சீனாவில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் மார்க்கெட்டுகளை மூட வேண்டுமென அமெரிக்க எம்பி.க்கள் 11 பேர் கொண்ட குழு, அமெரிக்காவுக்கான சீன தூதர் சூய் டியான்கய்க்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் உண்ணிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக சீன இறைச்சி மார்க்கெட்டுகளை மூட வேண்டும் எனவும், உலக மக்கள் நலனுக்காக மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையே ஓர் இடைவெளியை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் உள்ள இறைச்சி மார்க்கெட்டுகள் தான் உலகளாவிய பல நோய்களுக்கு மூலகாரணமாக திகழ்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.உயிரியல் தீவிரவாத தாக்குதல் அபாயம்:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், முதல் முறையாக இதுபற்றி விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் இரவு கூடியது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றன. மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ், ‘‘உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தும் முதல் சுகாதார நெருக்கடியாக கொரோனா வைரஸ் உள்ளது. இது மருத்துவ ரீதியாக மட்டுமின்றி பாதுகாப்பு ரீதியாகவும் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. இதன் பாதிப்புகள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை கேள்விக்குறியாக்கி விடும். சமூக அமைதியின்மைக்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும். இது கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நேரம் இது. மேலும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி உயிரியல் தீவிரவாத தாக்குதல்களை (பயோ வார்) கூட சில அமைப்புகள் நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. எனவே, உலக நாடுகள் அனைத்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்,’’ என எச்சரித்தார்.பிரான்ஸ் போர்கப்பலில் 50 வீரர்களுக்கு தொற்று:பிரான்ஸ் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான சார்லஸ் டி கால்லேவில் 50 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அக்கப்பல் விரைவில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள டவ்லோன் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. அக்கப்பலில் இருந்து முன்னெச்சரிக்கையாக 3 மாலுமிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் வைரஸ் உறுதியான யாரும் வெளியேற்றப்படவில்லை. அனைத்து வீரர்களும் முககவசம் அணிந்தபடி உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் உள்ள வீரர்களுக்கு வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.ரோகிங்யா முகாம் முழு முடக்கம்:வங்கதேசத்தில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காக்ஸ் பசார் மாவட்டத்தில் ரோகிங்யா முஸ்லீம்கள் முகாம் அருகே ஒருவருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அம்முகாம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை முகாமில் இருந்து யாரும் வெளியேறவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை முகாமில் உள்ள யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை.250 இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் தொற்று:சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் அளித்த பேட்டியில், ‘‘சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடத்திற்கு அருகில் வசித்தவர்கள். வைரஸ் பாதித்தவர்கள் உடல்நிலை சீராக உள்ளது’’ என்றார். கடந்த 8ம் தேதி இந்தியாவை சேர்ந்த 32 வயது நபர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் இதய பாதிப்பால் இறந்ததாகவும், கொரோனா தொற்று இல்லை என்றும் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.ஏமனிலும் புகுந்தான் கொரோனா எமன்:போர் பூமியான ஏமனையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹத்ராமாத் மாகாணத்தில் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அங்கு அரசுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டு படையும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே பல ஆண்டாக போர் நடந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகளே இல்லாத ஏமனில் கொரோனா பரவினால் அது மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை