இந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1ம் தேதி வரை நீட்டிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் அமரீந்தர் சிங் இதனை அறிவித்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவையும் இந்த கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6761-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆனது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பற்றமாக மகாராஷ்டிராவில் 1,364 பேரும், டெல்லியில் 898 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளது. ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாப்பிலும் ஊரடங்கை நீட்டித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை