ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை

தினகரன்  தினகரன்
ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை

டெல்லி : ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் எந்த திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், நிறைய இடங்களில் பொது விழாக்களுக்கு மக்கள் கூடி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏப்ரல் மாதத்தில் நிறைய பொது விழாக்கள் நடைபெற உள்ளன. நிறைய கோவில்களில் கொடை விழா, சமய வழிபாட்டு இடங்களில் திருவிழாக்கள் போன்றவை இருக்கும். இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அத்தகைய எந்த விழாவுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று  மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில், எந்த ஒரு சமய விழாவுக்கோ அல்ல தனிநபர் சார்ந்த விழாவுக்கோ அனுமதிக்க கூடாது, அதனை கட்டுப்பாடுடன் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்த போது, பல மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்கள் வெளியே வருவதை பார்க்க முடிகிறது. எனவே ஊரடங்கை முழுமையாக்க ஒரு சில வாரங்கள் கூட எங்களுக்கு தேவைப்  படுகிறது. அப்போது தான் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறி இருந்தார்.அதனை தொடர்ந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே  மத்திய அரசு மேற்கண்ட ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

மூலக்கதை