கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி

டெல்லி : கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு சார்பில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், கொரோனா பரவலைத் தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக 16,730 கோடி ரூபாய் வழங்கி உதவுவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதியளித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் Masatsugu Asakawa நிதி வழங்குவதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ளார்.கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதற்காக வரும் காலங்களில் தேவைகேற்ப கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் மசாட்சுகு கூறியுள்ளார். தற்போது இந்திய சுகாதார துறையின் அவசர நிலையை கருதி, உடனடி நிதியாக 16 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அனுப்ப உள்ளதாக மசாட்சுகு தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை