ஒரே வாரத்தில் 2வது முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரம் பேர் பலி: மொத்த உயிரிழப்பு 14,808 ஆனது

தினகரன்  தினகரன்
ஒரே வாரத்தில் 2வது முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரம் பேர் பலி: மொத்த உயிரிழப்பு 14,808 ஆனது

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நேற்று முன்தினமும் ஒரே நாளில் கொரோனா தாக்குதலால் 2 ஆயிரம் இறந்தனர்.  கொரோனா வைரசின் பூர்வீகமான சீனாவில் அதன் பாதிப்பால் இதுவரை 3,339 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இதன் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 14,808 ஆக அதிகரித்துள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், தனது கோர தாண்டவத்தை நடத்தி வரும் கொரோனாவின் பிடியில் சிக்கி அமெரிக்கா திணறுகிறது. அதிலும் குறிப்பாக, நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நியூயார்க்கில் மட்டும் 5,489 பேரும், நியூ ஜெர்சியில் 1,232 பேரும் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிபர் டிரம்ப் இந்தியாவின் உதவியை நாடினார். ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யாவிடில், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். இதனால், அந்நாட்டுக்கு இந்த மருந்தை சப்ளை செய்ய மத்திய அரசு சம்மதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், கொரோனா குறித்து முன்கூட்டியே உலக நாடுகளை எச்சரித்திருக்க வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.இந்நிலையில், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நேற்று முன்தினமும் கொரோனா தாக்குதலால் ஒரே நாளில் 1,973 பேர் பலியாகி உள்ளனர். இது அதற்கு முந்தைய நாள் இறப்பு எண்ணிக்கையை விட சற்று கூடுதலாகும். இரு தினங்களுக்கு முன்பும் இங்கு ஒரே நாளில் 1,939 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயினை (14,555) அமெரிக்கா பின்னுக்கு தள்ளியுள்ளது.

மூலக்கதை