ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கும் இந்தியாவின் உதவியை மறக்கமாட்டோம்: மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி

தினகரன்  தினகரன்
ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கும் இந்தியாவின் உதவியை மறக்கமாட்டோம்: மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியாவின் உதவியை மறக்க மாட்டோம்,’ என குறிப்பிட்டுள்ளார்.   கொரோனாவுக்கு சரியான தடுப்பு மருந்து இல்லாத நிலையில், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை கொரோனா பாதித்தவர்களுக்கு தற்காலிகமாக கொடுத்து சிகிச்சை அளிக்கலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியது. நியூயார்க்கில் 1500 பேருக்கு இந்த மாத்திரை கொடுத்து சோதிக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது. இதனால், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உலகளவில் தற்போது இந்த மருந்தை 70 சதவீதம் அளவுக்கு இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு மாதமும் 40 டன் மாத்திரைகளை (20 கோடி) உற்பத்தி செய்யும் திறன் நம் நாட்டில்தான் உள்ளது.  இந்த மருந்தின் தேவையை உணர்ந்த மத்திய அரசு, ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதையறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த அவர், ‘இந்தியா இந்த ஏற்றுமதியை அனுமதிக்கவில்லை என்றால், அதன் விளைவுகளை சந்திக்கும்,’ என மறைமுகமாக மிரட்டினார். பின்னர், இந்த மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் வகையில், இந்த மருந்துக்கான ஏற்றுமதி தடையை பிரதமர் மோடி நீக்கினார். தற்போது, குஜராத்தை சேர்ந்த 3 நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு 3 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தயாரித்து அனுப்புகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘நாம் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, நமக்கு மருந்து அனுப்ப அனுமதித்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதில், அவர் தீவிரமாக இருந்தார். இந்த உதவியை நாம் என்றும் நினைவில் கொள்வோம்,’’ என்றார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘சிக்கலான நேரத்தில் இந்தியா செய்த உதவி மறக்கப்படாது,’ என்று குறிப்பிட்டுள்ளார். இணைந்து வெற்றி பெறுவோம் டிரம்ப் நன்றிக்கு மோடி பதில்:அதிபர் டிரம்ப்பின் நன்றி குறித்து டிவிட்டரில் பிரதமர் மோடி அளித்துள்ள பதிலில், ‘இது போன்ற நேரங்கள் நண்பர்களை நெருக்கமாக்குகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மனிதாபிமான உதவிகள் அளிக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். இதில், நாம் இணைந்து வெற்றி பெறுவோம்,’ என குறிப்பிட்டுள்ளார். ‘நிதி வழங்குவதை நிச்சயம் மறுபரிசீலனை செய்வோம்’:‘கொரோனா பிரச்னையை அதிபர் டிரம்ப் அரசியலாக்கக் கூடாது,’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரேசஸ் கூறியதற்கு, டிரம்ப் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கொரோனா விஷயத்தை அரசியலாக்கக் கூடாது. கெப்ரேசஸ்தான் இதை அரசியலாக்குகிறார். நாங்கள் கடந்தாண்டு உலக சுகாதார அமைப்புக்கு ரூ.3,400 கோடி அளித்தோம். அதற்கு முந்தைய ஆண்டும் பல ஆயிரம் கோடி வழங்கினோம். சீனாவோ வெறும் ரூ.320 கோடிதான் செலவு செய்தது. ஆனால், எல்லாமே சீனாவுக்கு சாதகமாக நடக்கிறது. இது நியாயம் அல்ல. எனவே, உலக சுகாதார அமைப்புக்கு  நிதி அளிப்பதை அமெரிக்கா கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யும்,’’ என்றார். ‘அரசியலாக்க வேண்டாம்’:‘கொரோனா வைரஸ் பரவலை சீனா முன்கூட்டியே தெரிவிக்காததுதான், உலகம் தற்போதுள்ள நிலைக்கு காரணம். சீனாவுக்கு சாதகமாக செயல்படும் உலக சுகாதார அமைப்பின்  (டபிள்யூஎச்ஓ) அளிக்கும் நிதியை நிறுத்தப் போகிறேன்,’ என்று அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் மிரட்டினார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரேசஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை அதிபர் டிரம்ப் அரசியலாக்குகிறார். இதை அரசியலாக்கினால், உயிர் பலிகள்தான் அதிகரிக்கும். எனவே, இந்த விஷயத்தை அரசியலாக்குவதில் இருந்து, டிரம்ப் விலகியிருக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை