கொரோனா செய்தி துளிகள்

தினகரன்  தினகரன்
கொரோனா செய்தி துளிகள்

கொரோனாவை கண்டுபிடிக்க ஆப்கள் உருவாக்கிய ஐஐடி.கள்:பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், 4 ஐஐடி.களும் கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் ஆப்களை உருவாக்கியுள்ளன. * பெங்களூர் ஐஐஎஸ்சி  உருவாக்கியுள்ள `கோ கொரோனா கோ’ என்ற மொபைல் ஆப், கொரோனா பாதிப்பு உள்ளவர் இந்த ஆப் உள்ள மொபைல் போனை கடந்து சென்றால் அவரை துல்லியமாக அடையாளம் காட்டிவிடும். மேலும், கொரோனா இருப்பதாக சந்தேகமுள்ள நபர் முன்பு பேச பயன்படுத்திய புளு டூத் மற்றும் ஜிபிஎஸ்.சை சோதனை செய்வதன் மூலமும் அவருக்கு கொரோனா உள்ளதா? என கண்டறியலாம். * ரூபர் ஐஐடி.யில் பிடெக் படிக்கும் மாணவர் `சம்பர்க் ஓ மீட்டர்’ என்ற மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது என்பதை மேப்பில் அடையாளம் காட்டும். இந்த ஆப்பை கொண்டு அப்பகுதி மக்கள் சுய தனிமை செய்யவோ அல்லது டாக்டரிடம் ஆலோசனை பெறவோ எச்சரிக்கை விடுக்க முடியும். * பாம்பே ஐஐடி உருவாக்கியுள்ள `கொரோன்டைன்’ என்ற மொபைல் ஆப், கொரோனா தொற்று அபாயம் உள்ள பகுதியை அடையாளம் கண்டு அவர்களை தனிமை மண்டலத்துக்கு அனுப்பி வைக்க உதவுகிறது. * டெல்லி ஐஐடி வடிவமைத்துள்ள மொபைல் ஆப், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண உதவும். * ஐஐடி ரூர்கே பேராசிரியர் கமல் ஜெயின் உருவாக்கியுள்ள மொபைல் ஆப், கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறினால் எச்சரிக்கும். ஒடிசாவில் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசுக்கு பரிந்துரை:ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், காணொளி காட்சி மூலம் மாநில அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். பின்னர், அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், `அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இம்மாத இறுதி வரை ரயில், விமான சேவைகளை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளார். ஒடிசாவில் இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநில அரசு வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக நேற்று முன்தினம அறிவித்தது. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த முடிவை கைவிட்டது. உ.பி.யில் காய்கறி விற்பனையாளர்களாக மாறிய ரிக்‌ஷா தொழிலாளிகள்:கொரோனா ஊரடங்கு உத்தரவால், உத்தர பிரதேசத்தில் ரிக்‌ஷா இழுப்பவர்கள், சாலையோரம் தள்ளு வண்டிகளில் உணவு விற்பனை செய்பவர்கள் ஆகியோர் வேலையின்றி தவித்து வந்தனர். அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், பழம், காய்கறி விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சாலையோரம் தள்ளு வண்டிகளில் உணவு விற்றவர்கள் காய்கறி விற்பனையாளர்களாக மாறியுள்ளனர். தங்களின் தள்ளுவண்டிகளில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தெருத்தெருவாக சென்று விற்று, பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். லக்னோ மாவட்ட நிர்வாகம், அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று விநியோகிக்க அனுமதித்துள்ளது. இதனால், ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளர்கள் தங்கள் கைவண்டிகளை காய்கறி விற்பனை செய்ய பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், ஊரடங்கால் வேலையின்றி தவித்த தொழிலாளர்கள் பணம் ஈட்ட தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக தள்ளுவண்டியில் நூடுல்ஸ் விற்பனை செய்து வந்த ராஜூ என்பவர் கூறுகையில், `‘எனது குடும்பத்தில் 3 மகள்கள், மனைவி என 5 பேர் உள்ளோம். தற்போது காய்கறி விற்பனை மூலம் வருவாய் கிடைப்பதால் எனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்,’’ என்றார்.

மூலக்கதை