ஊரடங்கை பின்பற்றாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: வுகானில் சிக்கிய இந்தியர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
ஊரடங்கை பின்பற்றாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: வுகானில் சிக்கிய இந்தியர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் வுகான் நகரில், இந்தியர்களும் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் அருண்ஜித். கேரளாவை ேசர்ந்த இவர், வுகானில் நீர்வள நிபுணராக பணியாற்றி வருகிறார்.  அவர் கூறுகையில், ‘‘வுகானில் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது அங்கேயே தங்கி விட்டேன். இங்கு சிக்கியவர்களை மீட்க, மத்திய அரசு 2 சிறப்பு விமானங்களை இயக்கியது. அப்போதும் நான் இந்தியா செல்ல விரும்பவில்லை. இக்கட்டான நிலையில் இந்தியா செல்வதை நான் விரும்பவில்லை. கடந்த புதன்கிழமை தான் வுகானில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், கடந்த 73 நாட்களாக நான் வுகானில் உள்ள எனது அறையிலேயே தங்கியிருந்தேன். இத்தனை நாட்களாக நான் யாருடனும் பேசவில்லை. அதன் காரணமாக, இப்போது பேச்சு கூட  தடுமாறுகிறது. நான் கொரோனா பாதிப்பின்போது கேரளா செல்வது எனது பெற்றோருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அங்கு செல்லவில்லை.  கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் மழை தொடங்கி விட்டால் மக்களின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால், இந்த வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும்,’’ என்றார்.  இந்திய விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘‘வுகானில் இப்போது ஊரடங்கை நீக்கியதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சாவின் எல்லை வரை சென்று திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, இந்தியர்கள் ஊரடங்கையும் சமூக இடைவெளியையும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை,’’ என்றார்.

மூலக்கதை