கொரோனா வைரஸ் பாதிப்பால் 170 நாடுகளில்தனிநபர் வருமானம் குறையும்: சர்வதேச நிதியம் கணிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பாதிப்பால் 170 நாடுகளில்தனிநபர் வருமானம் குறையும்: சர்வதேச நிதியம் கணிப்பு

வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் 170 நாடுகளில் தனி நபர் வருமானம் குறையும்,’ என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) ஆண்டுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ‘சிக்கலை எதிர்நோக்குதல்: உலக பொருளாதாரத்துக்கான முன்னுரிமைகள்’ என்ற தலைப்பில் ஐஎம்எப் நிர்வாக இய்குனர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா, வாஷிங்டனில் உள்ள தலைமையகத்தில் ேநற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: எப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் மோசமான நிலையை தற்போது சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பு நமது சமூக மற்றும் பொருளாதார நிலையை மின்னல் வேகத்தில் சீர்குலைத்து விட்டது. இந்தளவுக்கு மோசமான நிலையை நாம் பார்த்ததாக நினைவில்லை. கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இந்தாண்டில் தனிநபர் வருமானம் 160 நாடுகளில் அதிகரிக்கும், என 3 மாதங்களுக்கு முன்பு நாங்கள் எதிர்பார்த்தோம். இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தாண்டில் 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும். கடந்த 1929ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு, உலக பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. அமெரிக்காவில் நியூயார்க் பங்குச் சந்தை சீர்குலைந்து, கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால், உலக பொருளாதாரம் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால், இந்தாண்டு உலக பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கும். 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் வாய்ப்பு உள்ளது. நிலைமையை சரி செய்ய வளரும் நாடுகளுக்கு பல லட்சம் கோடி நிதி தேவைப்படும். இதில் ஒரு பகுதியை மட்டுமே அவர்களால் திரட்ட முடியும். மீதி பணத்துக்கு அவர்களுக்கு அவசர உதவி தேவை. ஜி-20 மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து ஏராளமான நிதியுதவி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அதிகம் திட்டமிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை