உலகையே மிரட்டி வரும் கொரோனா: சீனாவில் 2 ஆம் அலை வீசக் கூடும்: அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
உலகையே மிரட்டி வரும் கொரோனா: சீனாவில் 2 ஆம் அலை வீசக் கூடும்: அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை

பெய்ஜிங்: உலகில் கொரோனா தீவிரமாக சுழன்றாடும் நிலையில், சீனாவிலும் அதன் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில்தான் தோன்றியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வைரஸ் முதலில் சீனா முழுக்க பரவியது. அதன்பின் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவியது. தற்போது உலகம் முழுக்க 150 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. முக்கியமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளது. பின்பு சீனாவில் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் சீனாவின் அதிகாரமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங் , வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்கள் வாயிலாக, நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது. கொரோனாவின் பாதிப்பில் இருந்து சீனாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி மீண்டு வரும் நிலையில், அவற்றை தடுக்கும் புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

மூலக்கதை