அனைத்து அமைச்சர்களும் ஆதரவு: மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி முடிவு எடுப்பார்...கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்

தினகரன்  தினகரன்
அனைத்து அமைச்சர்களும் ஆதரவு: மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி முடிவு எடுப்பார்...கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்

பெங்களூரு: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 5,734  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க 8 மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தவிட்டுள்ளார். மேலும், ஜூன் 17-ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும்  மூடவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில், கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அனைத்து அமைச்சர்களும்  ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும் இறுதி முடிவை பிரதமரர் மோடி தான் எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு  செய்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சுமார் 15.36 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு பயன்படுத்த உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

மூலக்கதை